×

கிரெடிட் கார்டில் இருந்து பறிபோன ரூ.1.10 லட்சம்- டெய்லர் தற்கொலை

 

கிரெடிட் கார்டை டி-ஆக்டிவேட் செய்வதாக கூறி ஓடிபி பெற்று 1 லட்சம் மோசடி செய்ததால் கிரெடிட் கார்டு பெற்ற திருப்பூர் பனியன் தொழிலாளி தற்கொலை செய்துகொண்டார்.


திருப்பூர் மாநகராட்சி நல்லூர் 2 வது வீதியை சேர்ந்தவர் பிரகாஷ்(36). இவர் சிட்கோ பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் டெய்லராக பணியாற்றி வருகிறார். இவர் உமாமகேஷ்வரி என்பவரை திருமணம் செய்து தனது மனைவி, தாய் மற்றும் சகோதரர் உடன் வசித்து வருகிறார். இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பாக எஸ்.பி.ஐ வங்கியின் கிரெடிட் கார்டு வாங்கி உள்ளார். ஆனால் வீட்டில் இருந்தவர்கள் கிரெடிட் கார்டு வேண்டாம் என தெரிவித்ததால் மீண்டும் அதனை ஒப்படைக்க எண்ணி உள்ளார். அப்பொழுது வங்கியில் இருந்து பேசுவதாக பெண் ஒருவர் பேசிய நிலையில் அவரிடம் தனக்கு கிரெடிட் கார்டு தேவை இல்லை எனவும் அதனை துண்டித்து விடுமாறும் தெரிவித்துள்ளார். 

இதனை அடுத்து அந்த அழைப்பில் பேசிய பெண் உங்களுக்கு ஒரு ஓடிபி வரும் அதனை தெரிவித்தால் உடனடியாக கிரெடிட் கார்டு டி ஆக்டிவேட் செய்யப்படும் என தெரிவித்துள்ளார். இதனை நம்பிய பிரகாஷ் தனக்கு வந்த ஓடிபி என்னை அவரிடம் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து சிறிது நேரத்தில் ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் வாங்கப்பட்டதாக பிரகாஷ் தொலைபேசிக்கு குறுந்தகவல் கிடைத்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த பிரகாஷ் வங்கியிடம் தெரிவித்துள்ளார். ஆனால் பணம் முறையாக அனுப்பப்பட்டுள்ளது எனவும் பணத்தை திரும்ப செலுத்துமாறு வங்கியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து நண்பர்கள் உதவியுடன் சைபர் கிரைம் போலீஸ் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் என பல இடங்களில் பிரகாஷ் புகார் அளித்தும் இதுவரையிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத சூழலில் தொடர்ந்து வங்கி தரப்பில் இருந்து பணத்தை திரும்ப செலுத்துமாறு மிரட்டல் விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 

இதனால் அச்சத்தில் இருந்த பிரகாஷ் மனைவி தனது தாய் வீட்டிற்கு சென்றிருந்த நிலையில் இன்று வேலைக்கு செல்லாமல் தென்னை மரத்திற்கு வைக்கப்படும் பூச்சி மாத்திரையை உட்கொண்டு உயிரிழந்தார். இதனை அடுத்து அவரது நிலையை கண்ட தாய் மற்றும் சகோதரர் சதீஷ் இருவரும் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரகாஷை கொண்டு வந்தனர் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள நல்லூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.