×

ரூ.525 கோடி நிதி மோசடி - 8 மணி நேரம் விசாரணை!  தேவநாதனை டான்ஃபிட்  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த திட்டம்.. 

 

மயிலாப்பூர் நிதி நிறுவனத்தில் ரூ.525 கோடி மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தேவநாதனிடம்  போலீஸார் 8 மணிநேரம் விசாரணை நடத்தியுள்ளனர். தொடர்ந்து இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளனர். 

சென்னை மயிலாப்பூரில் தெற்கு மாட வீதியில் செயல்பட்டு வரும் தீ மயிலாப்பூர் இந்து சாசுவத நிதி நிறுவனத்தின் தற்போதைய தலைவராக இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், வின் தொலைக்காட்சி அதிபருமான தேவநாதன் யாதவ் இருந்து வருகிறார்.  150 ஆண்டுகள் பழைமையான இந்த நிதி நிறுவனத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நிரந்தர வைப்பு தொகை உறுப்பினர்களாக உள்ளனர்.  இந்நிலையில் இந்த நிறுவனத்தில் வாடிக்கையாளர்களின் வைப்பு நிதி ரூ.525 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்தது.  காணாமல் போனதாக கூறப்படும் 525 கோடி ரூபாய் நாடாளுமன்றத் தேர்தலுக்கு பயன்படுத்தப்பட்டதா? எனவும் வாடிக்கையாளர்கள் சந்தேகத்தை எழுப்புகின்றனர்.   

இந்நிறுவனத்தின் தலைவராக உள்ள தேவநாதன் யாதவ், நடடந்து முடிந்த மக்களவை தேர்தலில் சிவகங்கை தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்டார். ஆகையால்  நிதி நிறுவனத்தின் 525 கோடி ரூபாய் பணத்தை நாடாளுமன்றத் தேர்தலுக்காக செலவிட்டுள்ளார்களா என சந்தேகிக்கும் வாடிக்கையாளர்கள்  இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், வின் தொலைக்காட்சி அதிபருமான தேவநாதன் யாதவை கைது செய்துள்ளனர்.  

புதுக்கோட்டையில் பதுங்கியிருந்த அவரை கைது செய்து, சென்னை அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.   தொடர்ந்து 8 மணி நேரம் தேவநாதன் யாதவிடம் விசாரணை நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக நேற்று கைது செய்யப்பட்ட தேவநாதன் உள்ளிட்ட 3 பேரை சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள டான்ஃபிட் நீதிமன்றத்தில் காவல்துறையினர் இன்று ஆஜர்படுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.