×

“டான்சி வழக்கில் ஜெயலலிதாவுக்கு நடந்தது பழனிசாமிக்கும் நடக்கும்” - ஆர்.எஸ்.பாரதி

 

சிபிஐ விசாரணை தாமதமாகும் என்பதால் கள்ளக்குறிச்சி விவகாரம் சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, “கள்ளக்குறிச்சி விவகாரத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சிபிஐ விசாரணை வேண்டும் என கோருகிறார். சிபிஐ விசாரணை தாமதமாகும் என்பதால் கள்ளக்குறிச்சி விவகாரம் சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சிபிஐ விசாரணை என்றால் என்ன என்பது எங்களுக்கும் தெரியும். 2016-ல் கண்டெய்னர் லாரியில் சிக்கிய ரூ.570 கோடி பணம் 8 வருடங்கள் ஆகியும், இதுவரை யாருடையது என்பது தெரியவில்லை. இப்படி பல வழக்குகள் சிபிஐ விசாரணையில் நிலுவையில் உள்ளது.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில் நாங்கள் சிபிஐ விசாரணை கோரவில்லை. சிறப்பு புலனாய்வு விசாரணை கோரியே வழக்கு தொடர்ந்தேன். நெடுஞ்சாலை டெண்டர் வழக்கில் நீதிமன்றம் தான் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. டான்சி வழக்கில் ஜெயலலிதா எப்படி வாயை கொடுத்து மாட்டிக்கொண்டாரோ அதேபோல் நெடுஞ்சாலைத் துறை டெண்டர் வழக்கில் எடப்பாடி பழனிசாமியும் சிக்குவார். டெண்டர் வழக்கை மீண்டும் தொடர உள்ளேன். சட்டத்தின் முன் தப்பிக்க முடியாது.


கள்ளக்குறிச்சி விவகாரத்தில் உண்மைக்கு புறம்பான பல தகவல்களை எடப்பாடி பழனிசாமி தெரிவித்து வருகிறார். உண்மையை விளக்க வேண்டியது திமுக அரசின் பொறுப்பு. ஈபிஎஸ் உத்தமபுத்திரன் போல ஆளுநர் மாளிகைக்கு முன் தவறான தகவல்களுடன் பேட்டியளித்துள்ளார். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது பொதுப்பட்டியலில் உள்ளது. ஆகவே மாநில அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முடியாது. வன்னியர்களுக்கு 20 சதவீத ஒதுக்கீடு உள்ளதால் 10.5% உள் ஒதுக்கீடு வழங்கினால் ஏற்கனவே வன்னியர்களுக்கு உள்ள இட ஒதுக்கீடு பாதிக்கும்..