×

சோகம்..! தூத்துக்குடி அருகே கடல் அலையில் சிக்கி 2 பெண்கள் பலி 

 

விளாத்திகுளம் அருகே உள்ள பெரியசாமிபுரத்தில் அமைந்துள்ள பத்திரகாளி அம்மன் கோயில் கொடை விழா கடந்த சில நாட்களாக நடைபெற்றது. இந்த விழாவுக்காக மதுரையில் வசிக்கும் பெரியசாமிபுரத்தைச் சேர்ந்த பலர் குடும்பத்தோடு வந்திருந்தனர். கோயில் விழா நேற்று முடிவடைந்ததை தொடர்ந்து இன்று காலை 7 மணியளவில் அனைவரும் பெரியசாமிபுரம் கடற்கரைக்குச் சென்று கடலில் குளித்துள்ளனர்.

அப்போது திடீரென ஏற்பட்ட பெரிய அலையில் சிக்கி 5 பெண்கள் அடித்துச் செல்லப்பட்டனர். அவர்கள் கூச்சலிட்டதை தொடர்ந்து அங்கு நின்றவர்கள் விரைந்து சென்று அவர்களை மீட்டு உடனடியாக வேம்பார் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். இதில், மதுரை ஜி.ஆர் நகரைச் சேர்ந்த முருகேசன் மகள் இலக்கியா (21), செல்வகுமார் மனைவி கன்னியம்மாள் (50) ஆகிய இருவரும் ஏற்கெனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

மேலும், கேரளாவை சேர்ந்த சாமிக்கண்ணு நாதன் மனைவி முருகலட்சுமி (38), மதுரையைச் சேர்ந்த முருகன் மனைவி ஸ்வேதா (22) மற்றும் செல்வகுமார் மனைவி அனிதா (29) ஆகிய மூவரும் முதலுதவி சிகிச்சைக்கு பின் மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக சூரங்குடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.