×

கொட்டும் மழையில் போராடிய சாம்சங் ஊழியர்கள் குண்டுகட்டாக கைது

 

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில், கொட்டும் மழையில் சாம்சங் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம்  சுங்குவார் சத்திரத்தில் தொழிற்சங்க அங்கீகாரம், 8 மணி நேர வேலை, ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சாம்சங் நிறுவனத்  தொழிலாளர்கள் கடந்த ஒரு மாதமாக வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தி வரும் நிலையில், அவர்களின் போராட்ட  பந்தலை காஞ்சிபுரம் மாவட்ட வருவாய்த்துறையினர் நேற்று இரவோடு, இரவாக அகற்றியுள்ளனர். அதுமட்டுமின்றி, போராட்டத்தை முன்னெடுத்த தொழிற்சங்க நிர்வாகிகள் 10 பேரை கைது செய்தனர். சி.ஐ.டி.யு., தொழிற்சங்கத்திற்கு அனுமதி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு மாதமாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள சாம்சங் ஊழியர்களுடன் நேற்று முன்தினம் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடந்தினர். இந்நிலையில் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால்  போராட்டம் தொடரும் என அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து சாம்சங் தொழிலாளர்களுக்கு ஆதரவாக இன்று செல்வப்பெருந்தகை, பாலகிருஷ்ணன், முத்தரசன், திருமாவளவன் உள்ளிட்டோர் போராட்ட பந்தலுக்கு செல்ல இருந்த நிலையில் ஊழியர்கள் திடீரென கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் சுங்குவார்சத்திரத்தில், கொட்டும் மழையில் சாம்சங் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். சிஐடியு தொழிற்சங்கம் அமைப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் தொடர்கிறது. போராட்ட பந்தலை போலீசார் பிரித்த போதும், தொடர்ந்து போராடி வரும் சாம்சங் ஊழியர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை ஈடுபட்டனர். பின்னர் குண்டுக்கட்டாக கைது செய்து போலீஸ் வாகனத்தில் அழைத்து சென்றனர்.