×

சாம்சங் தொழிலாளர்கள் கைது..  இன்று மாலை விசாரிக்கிறது சென்னை ஐகோர்ட்..

 

 தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட வந்த சாம்சங் தொழிலாளர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.  

ஸ்ரீபெரும்புதூர் சாம்சங் இந்தியா எலக்ட்ரானிக்ஸ் பிரைவேட் லிமிடட் நிறுவனத்தின் உற்பத்தி ஆலை தொழிலாளர்கள் செப்டம்பர் 9-ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை அறிவித்து , போராட்டமும் இன்றுடன் ஒரு மாதத்தை எட்டியிருக்கிறது.  குறிப்பாக ஊதியத்தை உயர்த்தி வழங்கிட, தொழிற்சங்கத்திற்கு அங்கீகாரம் கிடைத்திட, 9 மணி நேரத்திற்கும் அதிகமாக நீளும் பணிநேரத்தைக் குறைத்திட உள்ளிட்ட நியாயமான பல கோரிக்கைகளை முன்வைத்து சுமார் 90 சதவிகித சாம்சங் ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை அறிவித்துத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

போராட்டத்தில் ஈடுபடும் தொழிலாளர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்றும், அவர்கள் வேலைக்கு வராவிட்டால் சம்பளம் பிடித்தம் மற்றும் பணி நீக்கம் உள்ளிட்ட நடவடிக்கை செய்யப்படும் என சாம்சங் நிறுவனம் தெரிவித்தது. ஆனாலும் தொடர்ந்து தொழிலாளர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், சாம்சங் தொழிலாளர்கள் போராட்ட விவகாரத்தில் விரைந்து தீர்வு காண வேண்டும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார். ஏற்கனவே நடைபெற்ற 3 கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், அமைச்சர்கள் டிஆர்பி.ராஜா, தா.மோ.அன்பரசன், கணசேன் ஆகியோர் தலைமையில் நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டது.  

இதில் 14  அம்ச கோரிக்கைகளுடன் உடன்பாடு ஏற்பட்டு  ஒரு தரப்பு தொழிலாளர்களுடன் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.  அரசின் கோரிக்கைடை ஏற்று தொழிலாளர்கள் பணிக்குத் திரும்ப வேண்டும் என அமைச்சர் தா.மோ. அன்பரன் கேட்டுக்கொண்டார். ஆனால்  சிஐடியு தொழிற்சங்கத்தினர் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை எனவும், தொழிற்சங்கத்தை அங்கீகரிக்கும் வரை போராட்டம் தொடரும் என்றும் அறிவித்துள்ளனர். 

இதனிடையே நேற்றிரவு தொழிற்சங்கத்தை சேர்ந்த தொழிலாளர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.  இது பெரும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில்,   இன்று காலை போராட்டக் களத்தில் கூடிய சாம்சங் தொழிலாளர்கள் சாலையில் அமர்ந்து போராட்டம் ஈடுபட்டனர். இந்நிலையில் கொட்டும் மழையிலும் போராட்டத்தை தொடர்ந்த  நிலையில்,  போலீசாருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இருப்பினும் சி.ஐ.டி.யு தலைவர் சௌந்தரராஜன் உள்பட  போராட்டக்காரர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.   

அத்துடன் திமுக கூட்டணிக் கட்சிகளான சிபிஐ, சிபிஎம், மதிமுக, விசிக உள்ளிட்ட  அனைத்துக் கட்சிகளும் சாம்சங் தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இதனிடையே, நேற்றிரவு தொழிற்சங்கத்தினர் கைது செய்யப்பட்டதை எதிர்த்து ஆட்கொணர்வு மனுவை சிஐடியு தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவை இன்று பிற்பகலில் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.