×

சங்கரய்யா மறைவுக்கு சசிகலா இரங்கல்!!

 

சுதந்திர போராட்ட தியாகியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான சங்கரய்யா மறைவுக்கு சசிகலா இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சசிகலா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,"சுதந்திர போராட்ட தியாகியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான சங்கரய்யா அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன். தமிழகத்தில் தலைசிறந்த அரசியல் தலைவராகவும், தமிழர்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து போராடியவருமான பெரியவர் சங்கரய்யா அவர்களின் மறைவு யாராலும் ஈடு செய்ய முடியாதது.

புரட்சித்தலைவர் அவர்கள் தனது இயக்கத்தை தோற்றுவித்த பின்னர், 1973ஆம் ஆண்டு நடைபெற்ற திண்டுக்கல் நாடாளுமன்ற இடைத்தேர்தலின் போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக சங்கரய்யா அவர்கள் போட்டியிட இருந்த நிலையில், புரட்சித்தலைவரின் அன்பு வேண்டுகோளை ஏற்று, அன்றைக்கு தனது வேட்பு மனுவை வாபஸ் பெற்றதோடு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பெற்ற முதல் வெற்றிக்கு பெரும் உறுதுணையாக இருந்தவர் பெரியவர் சங்கரய்யா அவர்கள் என்பதை இந்நேரத்தில் எண்ணிப்பார்த்து மிகவும் பெருமிதம் அடைகிறேன். அதனைத்தொடர்ந்து, புரட்சித்தலைவி அம்மா அவர்களிடத்திலும் நல்ல நட்பு பாராட்டியதோடு, இயக்கத்தின் வெற்றிக்காக, பல நேரங்களில் தோழமை உணர்வுடன் ஆதரவு அளித்ததையும் இந்நேரத்தில் எண்ணிப்பார்த்து பெருமையடைகிறேன்.

தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவரான தோழர் சங்கரய்யா அவர்களை இழந்து வாடும் அவர்களுடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், உடன் பணியாற்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த தோழர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்." என்று குறிப்பிட்டுள்ளார்.