×

அரசுக்கும், மக்களுக்கும் பயனளிக்காத கார் பந்தயம் நடக்கக்கூடாது- சசிகலா

 

தமிழக அரசுக்கும், மக்களுக்கும் எந்த வகையிலும் பயனளிக்காத பார்முலா 4 கார் பந்தயத்தை, சென்னையில் நடத்துவதை திமுக தலைமையிலான  கைவிட வேண்டும் என சசிகலா கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுதொடர்பாக சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில், “பார்முலா 4 கார் பந்தயம், சென்னை தீவுத் திடல் மைதானத்தை சுற்றியுள்ள 3.5 கி.மீ சுற்றளவு சாலைகளில் இரவுப் போட்டியாக நடத்தப்படும் என்று கடந்த ஆண்டு தமிழக அரசு அறிவித்தது. இதற்காக தமிழ்நாடு அரசு ரூ.40 கோடியை அப்போதே செலவு செய்தது. இதற்கிடையில் பொதுமக்கள் வாழுகின்ற வசிப்பிடங்களில் இது போன்ற கார் பந்தயங்களை நடத்துவதால் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதகங்களையும், இடையூறுகளையும் பற்றி அனைவரும் தெரிவித்தனர்.

அதாவது இருங்காட்டுக்கோட்டையில் பிரத்யேகமாக கார் பந்தய தளம் இருக்கும் நிலையில்,  சென்னை தீவுத்திடலில் இந்த கார் பந்தயத்தை நடத்த வேண்டிய அவசியம் என்ன? என்று தெரியவில்லை. மேலும், இந்த பந்தய வழித்தடத்தில் உயர் நீதிமன்றம், துறைமுகம், அரசு பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை, ராணுவ மற்றும் கடற்படை அலுவலகங்கள் இருப்பதால் தேவையற்ற இடையூறுகளை ஏற்படுத்தும். அதிலும் குறிப்பாக, 250 கிலோமீட்டர் வேகத்தில் பந்தய கார்கள் செல்லும்போது 130 முதல் 150 டெசிபல் அளவுக்கு அதிக சத்தம்  ஏற்படும் என்பதால், மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை மிகவும் பாதிக்கும். பொதுமக்களின் போக்குவரத்துக்கும் இடையூறாக இருக்கும் என்ற குற்றசாட்டு எழுந்தது.

சமூக ஆர்வலர்கள் சிலர் இவற்றையெல்லாம் குறிப்பிட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தனர். சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கின் விசாரணையின்போது திமுக தலைமையிலான அரசு கார் பந்தயம் நடத்துவது அரசின் கொள்கை முடிவு என்று தெரிவித்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றம், பொதுமக்களின் பாதுகாப்பு, நோயாளிகளுக்கு இடையூறு இல்லாமல் உரிய பாதுகாப்பு நடவடிக்கையுடன் நடத்தப்பட வேண்டும். பந்தயம் நடத்தும் ரேஸிங் ப்ரோமோசன்ஸ் பிரைவேட் லிமிடட் (Racing Promotions Pvt Ltd), பந்தயத்துக்காக அரசு செலவிட்ட ரூ.42 கோடியை, அரசுக்குத் திருப்பியளிக்க வேண்டும். பந்தயத்திற்கான முழு செலவையும் தனியார் நிறுவனமே ஏற்க வேண்டும்" என்ற நிபந்தனைகளின் அடிப்படையில் கார் பந்தயம் நடத்த அனுமதி அளித்தது.

தற்போது தமிழக அமைச்சரோ சென்னையில் ஆகஸ்ட் 31ஆம் தேதி மற்றும் செப்டம்பர் 1ஆம் தேதி ஆகிய இரு நாட்களில் கார் பந்தயம் நடத்தப்படும் என்றும், காலையில் நடக்கும் கார் பந்தயத்தை பொதுமக்கள் இலவசமாக பார்க்கலாம் என்று கூறுகிறார். மேலும், மற்ற நேரங்களில் போட்டிக்கான பார்வைக் கட்டணமாக, 2,000 முதல் 20,000 ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக  விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அறிவித்துள்ளது. கார் பந்தயத்தை ஏற்கனவே இரவு போட்டியாக நடத்தப்படும் என்று சொல்லிவிட்டு தற்போது பகலிலும் நடத்த திட்டமிட்டிருப்பது தமிழக அமைச்சரின் பேச்சிலிருந்து தெரிகிறது. இதனால் பொதுமக்களின் போக்குவரத்துக்கு கண்டிப்பாக இடையூறு ஏற்படக்கூடும். மேலும், தமிழக அமைச்சர் கார் பந்தயத்தை பொதுமக்கள் இலவசமாக பார்க்கலாம் என்று சொன்னதை எண்ணி பொதுமக்கள் எந்தவித பாதுகாப்புமின்றி வந்தால், அவர்களின் செவித்திறன் பாதிப்படைய வாய்ப்புள்ளது என வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தனியார் நிறுவனத்துடன் மூன்று ஆண்டுகளுக்கு இந்த கார் பந்தயத்தை நடத்த ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இந்த இரண்டு நாள் நிகழ்ச்சிக்காக சென்னை மாநகராட்சி மக்களின் வரிப்பணத்தை வீண் செலவு செய்து, நன்றாக இருந்த சாலையை கார் பந்தய தளமாக தமிழக அரசு மாற்றி இருக்கிறது. இந்த இரண்டு நாள் நிகழ்ச்சிகளுக்கு பிறகு மீண்டும் இந்த சாலையை பொது போக்குவரத்திற்கு ஏற்றவாறு மாற்றி அமைக்கவேண்டும். இதற்கு ஆகும் செலவும் சென்னை மாநகராட்சியின் தலையில் தான் விடியப்போகிறது. இவ்வாறு ஒவ்வொரு வருடமும் சென்னை மாநகராட்சி, மக்களின் வரிப்பணத்தை இதுபோன்று யாருக்கும் பயனில்லாத விளம்பர நிகழ்ச்சிக்காக செலவழிக்கப்போகிறதா? தமிழகத்தின் நிதிநிலைமை ஏற்கனவே அதலபாதாளத்தில் இருக்கும் நிலையில் இது போன்ற வீண் விரயங்களை திமுக தலைமையிலான அரசு செய்வது எந்த விதத்தில் நியாயம்? என்று தெரியவில்லை. ஒரு தனியார் நிறுவனம் நடத்தும் இந்த போட்டிக்காக திமுக தலைமையிலான அரசு ஏற்கனவே செலவு செய்த மக்களின் வரிப்பணம் 40 கோடி ரூபாய்க்கான விபரம் என்னவென்று யாருக்கும் தெரியவில்லை. மேலும், நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி தனியார் நிறுவனம் 42 கோடியை தமிழக அரசுக்கு திருப்பி அளித்துவிட்டதா? என்பதும் தெரியவில்லை. இந்நிலையில் தற்போது விளம்பரதாரர்கள் என்ற பெயரில் தொழிலதிபர்களையும், தொழில் நிறுவனங்களையும் நிதி அளிக்க கட்டாயப்படுத்துவதாக புகார்கள் வருகின்றன. தமிழகத்தில் ஏற்கனவே வரலாறு காணாத வகையில் உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தால் விழி பிதுங்கி நிற்கும் தொழில் நிறுவனங்களை திமுகவினர் மென்மேலும் வஞ்சிப்பது வேதனையளிக்கிறது.

நாம் எவ்வளவுதான் எடுத்து சொன்னாலும் அதைப்பற்றியெல்லாம் சிந்தித்து பார்க்காமல் திமுக தலைமையிலான அரசு, தமிழக மக்களை ஏதாவது ஒரு வகையில் துன்புறுத்துவதை வாடிக்கையாக கொண்டுள்ளது. எனவே தமிழக மக்கள் என்ன ஆனாலும் பரவாயில்லை சென்னையில் கார் பந்தயத்தை நடத்தியே தீர வேண்டும் என்று திமுக தலைமையிலான அரசு உறுதியாக இருப்பதை மன்னிக்க முடியாது. எனவே, இந்த மக்கள் விரோத, திமுக தலைமையிலான விளம்பர அரசுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள். தமிழக மக்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டும், தமிழக அரசுக்கும், மக்களுக்கும்  எந்த வகையிலும் பயனளிக்காத பார்முலா 4 கார் பந்தயத்தினை சென்னையில் நடத்துவதை கைவிட வேண்டும் என திமுக தலைமையிலான அரசைக் கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.