×

எம்ஜிஆர் பெயரை உச்சரிக்க கூட தகுதியற்றவர்கள் திமுகவினர்- சசிகலா

 

ஆ.ராசா போன்ற வாய்ச்சவடால் வீரர்களுக்கு வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என சசிகலா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில், “பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவரின் பெயரை உச்சரிக்க கூட தகுதியற்றவர்கள் தான் திமுகவினர். அதிலும், குறிப்பாக ஆ.ராசா போன்றவர் புரட்சித்தலைவரை பற்றி இழிவாக பேசுவது கடும் கண்டனத்திற்குரியது. திமுகவை சேர்ந்த ஆ.ராசாவுக்கு 2ஜி வழக்கு மீண்டும் விஸ்வரூபம் எடுப்பதால் என்னசெய்வதென்று தெரியாமல் "பயந்தவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்" என்ற மனநிலையில் கண்டதையும் பேசி வருகிறார். புலியைப் பார்த்து பூனை சூடு போட்டு கொண்ட கதையாக புரட்சித்தலைவரை இகழ்ந்து ஆ.ராசா பேசியது அவரது அறியாமையை காட்டுகிறது. புரட்சித்தலைவரை பற்றி பேச ஆ.ராசாவுக்கு என்ன தகுதி இருக்கிறது? என்று நாம் சொல்லி தெரியவேண்டியதில்லை. அது தமிழக மக்களுக்கே நன்றாக தெரியும்.

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் யார்? என்பதை பேரறிஞர் அண்ணா அவர்கள் நன்றாக புரிந்து வைத்து இருந்தார். அதனால் தான் எனது தம்பியாம் இதயக்கனி என்று புரட்சித்தலைவரைப் பார்த்து பேரறிஞர் அண்ணா அவர்கள் அன்போடு கூப்பிட்டார். வேறு யாரையும் இது போன்று அழைக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால், திமுகவினரை 13 ஆண்டுகாலம் எதிர்கட்சியாகவே அமரவைத்த புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் எப்படிப்பட்டவர் எனபது திமுக தலைவர் மறைந்த கருணாநிதி அவர்களுக்கு நன்றாகவே தெரியும். இவர்களை காட்டிலும் தமிழத்தில் பட்டி தொட்டியில் உள்ள அனைவருக்கும் புரட்சித்தலைவரின் அருமை பெருமைகள் பற்றி நன்றாகவே தெரியும்.

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் தமிழ் மொழியின் மீது கொண்ட பற்றினாலும், தமிழக மக்களின் மீது கொண்ட அளவுகடந்த அன்பினாலும் எண்ணற்ற நலத்திட்டங்களை வகுத்து கொடுத்த மாமனிதர். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் தந்தை பெரியாரின் நூற்றாண்டைத் தமிழகம் எங்கும் கொண்டாடினார். அவருடைய எழுத்துச் சீர்திருத்தத்தை நடைமுறைப்படுத்தித் தமிழ்மொழியை நவீனப்படுத்திய நாடோடி மன்னன் என்பதை இந்த நாடே அறியும். தமிழுக்கென்று தஞ்சையில் பல்கலைக்கழகம் அமைத்து கொடுத்த அன்புத்தலைவர்  புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள். உலகத்தமிழ் மாநாட்டைச் சிறப்புடன் நடத்தி உலகத் தமிழர்களை ஒருங்கிணைத்தவர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள்.

தமிழ்நாட்டில் அரசாணைகளைத் தமிழில் வெளியிடவும், தமிழில் கையெழுத்திடவும் வைத்த செயல்வீரர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள். ”தமிழ்ப்பண்புக்கு நான் அடிமை” என்று உணர்த்துவதற்காக பொங்கலைத் தமிழர் திருநாளாகக் கொண்டாடிய தமிழகத்தின் தவப்புதல்வன் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள். தமிழறிஞர் தெ.பொ.மீனாட்சி சுந்தரனாரின் மறைவுக்குப் பிறகு அவரது திருவுருவச் சிலையை, அவர் துணைவேந்தராகப் பணியாற்றிய மதுரைப் பல்கலைக் கழகத்தில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள்  திறந்து வைத்தார். மதுரை பல்கலைக்கழகத்துக்கு பெருந்தலைவர் காமராஜர் பெயரை சூட்டியதும் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.அவர்கள்தான்! புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் இந்த மண்ணை விட்டு மறைந்தாலும், மக்களின் மனங்களில் இன்றைக்கும் நிரந்தரமாக குடி கொண்டிருக்கும் ஒப்பற்ற தலைவராக இருக்கிறார். அப்படிப்பட்ட மறைந்த தலைவரை பற்றி இழிவாக பேசுவதை வேடிக்கை பார்க்கும் திமுக தலைமைக்கும் எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

உயர உயரப் பறந்தாலும், ஊர்க்குருவி பருந்தாகுமா? என்ற பழமொழிக்கேற்ப ஆ.ராசா போன்ற வாய்ச்சவடால் வீரர்களுக்கு வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்பதை மட்டும் இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.