×

உலக அரங்கில் வெற்றிநடை போட வைத்துள்ளது சந்திரயான் 3- சசிகலா

 

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ (ISRO) அனுப்பியுள்ள சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் இன்று மாலை வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது. 

இதற்கு வாழ்த்து தெரிவித்து சசிகலா தனது ட்விட்டர் பக்கத்தில், “நிலவை ஆய்வு செய்வதற்காக, இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தால், கடந்த ஜூலை மாதம் 14ஆம் தேதி விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான்-3 விண்கலம் திட்டமிட்டபடி, இன்று நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரை இறங்கி ஒரு வரலாற்று சாதனையை படைத்திருப்பது, நம் அனைவருக்கும் எல்லையற்ற மகிழ்ச்சியையும், பெருமையையும் அளிக்கிறது.
 
நிலவின் தென் பகுதியில் முதன் முதலில் விண்கலத்தை தரை இறக்கிய நாடு என்ற சிறப்பையும், பெருமையையும் நம் இந்திய திருநாடு இன்று பெற்றிருப்பது, இந்தியர்களாகிய நம் அனைவரையும் தலை நிமிர செய்துள்ளது. நிலவின் தென் பகுதியில்தான் அதிகளவு கனிம வளங்கள் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் அங்கு விக்ரம் லேண்டர் துணையுடன் 14 நாட்கள் நடத்தப்படப் போகும் ஆய்வுகள் மிக மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.


 
நம் இந்திய தேசத்தை, வல்லரசு நாடுகளுக்கு இணையாக உலக அரங்கில் வெற்றிநடை போட வைத்துள்ள சந்திரயான்-3 திட்டத்தின் வெற்றிக்கு உறுதுணையாக விளங்கிய தமிழக விஞ்ஞானிகள் உள்ளிட்ட இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.