×

சிப்காட் விரிவாக்கத்திற்காக நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கையை கைவிடுக- சசிகலா

 

விவசாய பெருங்குடி மக்களுக்கு விரோதமாக செயல்படும் திமுக தலைமையிலான விளம்பர அரசை வன்மையாக கண்டிப்பதாக சசிகலா தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே சிப்காட் தொழிற்பேட்டை விரிவாக்கத்திற்காக விவசாய நிலங்களை தமிழக அரசு கையகப்படுத்துவதை கண்டித்து போராட்டம் நடத்திய விவசாயிகளை திமுக தலைமையிலான அரசு கைது செய்வதும், குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுப்பதும் ஒரு மனிதாபிமானமற்ற செயல். விவசாய பெருங்குடி மக்களுக்கு விரோதமாக செயல்படும் திமுக தலைமையிலான விளம்பர அரசை வன்மையாக கண்டிக்கிறேன்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே சிப்காட் தொழிற்பேட்டை 3-வது அலகு விரிவாக்கத்திற்காக மேல்மா உட்பட 11 கிராமங்களில் 3,174 ஏக்கர் விவசாய நிலங்களை திமுக தலைமையிலான அரசு கைப்பற்ற நடவடிக்கை எடுத்துள்ளதை கண்டித்து மேல்மா சிப்காட் எதிர்ப்பு விவசாயிகள் இயக்கம் சார்பில் மேல்மா கூட்டுச்சாலையில், கடந்த 126 நாட்களாக அறவழியிலும், ஜனநாயக முறையிலும் போராடி வந்த விவசாயிகளில் 20 நபர்களை கைது செய்திருப்பது அநியாயமான செயல். அதிலும் 7 விவசாயிகள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுத்திருப்பது மிகவும் கொடுமையானது. மேலும் அப்பகுதியில் வீடு, வீடாக சென்று போராட்டத்தை முன்னெடுத்து சென்றவர்கள் மற்றும் போராட்டத்தில் பங்கேற்று கருத்து தெரிவித்த விவசாயிகளை காவல்துறையினர் தேடி வருவதாகவும் செய்திகள் வருகின்றன.

திமுக தலைமையிலான அரசு தமிழகத்தில் இன்றைக்கு கொலை செய்பவர்கள், கொள்ளையடிப்பவர்கள், கள்ளச்சாராயம் விற்பவர்கள், போதை பொருட்கள் கடத்துபவர்கள், சாமானிய மக்களிடமிருந்து நிலத்தை அபகரிப்பவர்கள், கட்டப்பஞ்சாயத்து, வழிப்பறி, செயின் பறிப்பு போன்ற அனைத்து விதமான சட்டவிரோத செயல்களிலும் ஈடுபடுபவர்களை கண்டுகொள்வதில்லை. மேலும், குற்றச்செயல்களை தடுக்கநினைக்கும் காவல்துறையினருக்கே பாதுகாப்பில்லாத ஒரு அவல நிலை இருக்கிறது. இதுபோன்ற சட்ட விரோத செயல்களை தடுக்க முடியாமலும், அதில் ஈடுபடுபவர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்க துணிவில்லாமலும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நாளுக்கு நாள் சீரழிந்து கொண்டு இருக்கிறது. ஆனால் இதைப்பற்றியெல்லாம் கொஞ்சமும் கவலைப்படாத திமுக தலைமையிலான அரசு, தங்களது விளை நிலங்கள் பறிபோவதை தடுப்பதற்காக, ஜனநாயக முறையில் போராடிய அப்பாவி விவசாயிகள் மீது மனசாட்சியற்ற வகையில், தவறான நடவடிக்கைகளை எடுப்பது எந்தவிதத்தில் நியாயம்? இதற்காகவா தமிழக மக்கள் வாக்களித்தனர்.

திமுக தலைமையிலான அரசிடமிருந்து தங்களது விளைநிலங்களை பாதுகாக்க போராடிய விவசாயிகள் மீது போடப்பட்டுள்ள குண்டர் சட்டத்தை திரும்ப பெற வேண்டும், மேலும், கைது செய்யப்பட்டுள்ள விவசாயிகளை உடனே விடுதலை செய்ய வேண்டும் என தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன். அதேபோன்று, மேல்மா சிப்காட் விரிவாக்கத்திற்காக நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கையை உடனே கைவிட வேண்டும் என திமுக தலைமையிலான விளம்பர அரசைக் கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.