×

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு - முதல் முறையாக ஜாமின்

 

சாத்தான்குளத்தில் வியாபாரி ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் ஆகியோரை சாத்தான்குளம்  போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்று தாக்கினர். கோவில்பட்டி கிளைச் சிறையில் இருந்த இருவரும் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு இறந்தனர். சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்.ஐ.,க்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ்,  உள்ளிட்ட 9 காவலர்கள்  கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது சி.பி.ஐ., வழக்குப் பதிந்தது. 9 பேர் மீது குற்றப்பத்திரிகையை கடந்த  2020 செப்.,ல் சி.பி.ஐ., தாக்கல் செய்தது. இந்தகொலை  வழக்கு மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்நிலையில் சாத்தான் குளம் ஜெயராஜ் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கடந்த 2020ம் ஆண்டு உயிரிழந்த வழக்கில் கைதாகி சுமார் 3 ஆண்டுகளாக சிறையில் உள்ள காவலர் வெயில் முத்துவுக்கு 3 நாட்கள் இடைக்கால ஜாமின் வழங்கி உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. 

கயத்தாறு பகுதியைச் சேர்ந்த காவலர் வெயில் முத்து, தனது மகளுக்கு 7ம் தேதி பூப்புனித நீராட்டு விழா இருப்பதால் இடைக்கால ஜாமின் கோரி மனுத் தாக்கல். இன்று மாலை 6 மணி முதல் வரும் 9ம் தேதி மாலை 6 மணி வரை இடைக்கால ஜாமின் வழங்கி நீதிபதி தண்டபாணி உத்தரவிட்டுள்ளார். சிபிஐ விசாரித்து வரும் இவ்வழக்கில் ஆய்வாளர் ஸ்ரீதர், எஸ்.ஐ.க்கள், காவலர்கள் என 9 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், சுமார் 3 ஆண்டுகளாக உச்ச நீதிமன்றம் வரை சென்றும் யாருக்கும் ஜாமின் கிடைக்கவில்லை.