ஜனவரியில் இறுதி வாக்காளர் பட்டியல்- சத்யபிரதா சாகு
ஜனவரியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் அடுத்தாண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. முன்னதாக தெலங்கானா, ராஜஸ்தான் உள்ளிட்ட 5 மாநில தேர்தல்கள் தொடங்கியுள்ளன. இந்த தேர்தல் முடிவுகள் வரும் டிச.3-ம் தேதி அறிவிக்கப்பட உள்ளன. இதையடுத்து, நாடாளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒருபுறம் 5 மாநில தேர்தல் பணிகள் இருந்தாலும், தேர்தல் நடைபெறாத மாநிலங்களில், நாடாளுமன்ற தேர்தலுக்கான ஆயத்தப்பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி, மின்னணு இயந்திரங்களை சரிபார்த்தல், வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்தல், வாக்குச்சாவடிகளை தயார் செய்தல் ஆகிய பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த சூழலில், மண்டல வாரியாக தேர்தல் அதிகாரிகளுடன் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான ஆலோசனையில் இந்திய தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது. அந்த வகையில் தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா ஆகிய மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி, அந்தமான் நிக்கோபார், லட்சத்தீவு ஆகிய யூனியன் பிரதேச தலைமை தேர்தல் அதிகாரிகள் பங்கேற்றனர்.
தேர்தல் ஆணைய அதிகாரிகள் உடனான ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, “ஜனவரியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள தயாராக உள்ளோம். சட்டம், ஒழுங்கு பிரச்சனை இல்லாத மாநிலமாக தமிழ்நாடு உள்ளது என இந்திய தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்துள்ளோம்” என்றார்.