×

"உதயநிதி என்னை பார்த்து அஞ்சுகிறார்; அதனாலேயே என் மீது பொய்வழக்கு"- சவுக்கு சங்கர்

 

பெண் காவலர்களை அவதூறாக பேசியதாக சவுக்கு சங்கர் மீது தொடரப்பட்ட 17 வழக்குகளையும் ஒன்றாக இணைத்து விசாரிக்க கோரி அவர் தரப்பில் தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசு தரப்பில் 3 வாரங்களுக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. 

பெண் காவலர்களை அவதூறாக பேசியது, ஹோட்டல் அறையில் கஞ்சா வைத்திருந்தது உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில்  கைது செய்யப்பட்டுள்ள சவுக்கு சங்கர் முதலில் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். பின்னர் வழக்கு விசாரணைக்காக சென்னை புழல் சிறைக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில்  அவ்வப்போது வழக்கு விசாரணைக்காக அவர் நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்பட்டு வருகிறார். 

இந்நிலையில் ஒரு வழக்கில் ஜாமின் வழங்கினால் மற்றொரு வழக்கில் கைது செய்யப்படுவதாகவும், தனக்கு எதிரான 17 வழக்குகளையும் ஒன்றாக சேர்த்து விசாரிக்க உத்தரவிடுமாறும் சவுக்கு சங்கர் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. அனைத்து வழக்குகளும் ஒரே சம்பவத்துக்காக பதியப்பட்டதா என சரிபார்க்க அவகாசம் வழங்க வேண்டும் என காவல் துறை தரப்பு கோரிக்கை விடுத்த நிலையில், காவல் துறை கோரிக்கையை ஏற்று அனைத்து வழக்குகளும் ஒரே சம்பவத்துக்காக பதியப்பட்டதா என விளக்கமளிக்க காவல் துறை தரப்புக்கு சென்னை உயர்நீதிமன்றம் அவகாசம் வழங்கபட்டது.

முன்னதாக குழித்துறை நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டபோது சவுக்கு சங்கர் செய்தியாளர்களை பார்த்து,  திமுக அரசு என்னை கண்டு அஞ்சுகிறது. உதயநிதி ஸ்டாலின் என்னை கண்டு பயப்படுகிறார். அதனாலேயே என் மீது உள்ள பயத்தாலே திமுக தொடர் பொய் வழக்கு பாய்கிறது. அடுத்தடுத்து வழக்குகளில் கைது செய்ய சதி நடக்கிறது என கோஷமிட்டபடி சென்றார்.