‘காலாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது’ - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு..
காலாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என பள்ளிகளுக்கு தமிழக பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
நடப்பு கல்வியாண்டில் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. 11, 12 பயிலும் மாணவர்களுக்கான தேர்வு கடந்த புதன் கிழமை(செப் 18) முதல் தொடங்கிய நிலையில், 6 முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு செப்.20 தொடங்கியது. செப்டம்பர் 27ம் தேதி (நாளை) வரை நடைபெற உள்ளது. முன்னதாக செப். 28 முதல்அக். 2 வரை பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை வழங்கப்பட்டது. 5 நாட்கள் மட்டுமே காலாண்டு விடுமுறை விடப்பட்டிருந்த நிலையில், ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
காலாண்டு விடுமுறையை நீட்டிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், அரசு அதனை பரிசீலித்து தமிழகத்தில் பள்ளிகளுக்கான காலாண்டு விடுமுறை நீட்டித்து பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அதன்படி அடுத்த ஞாயிற்றுக்கிழமை ( அக்டோபர் 6ம் தேதி வரை) விடுமுறை நீட்டிக்கப்படுவதாகவும், அக்டோபர் 7ம் தேதி (திங்கள்கிழமை) பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் காலாண்டு விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் எடுக்கக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. செப்.28 முதல் அக்.6 வரை காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பள்ளிக்கல்வித்துறை இந்த ஆணையினை பிறப்பித்திருக்கிறது. மேலும், விடுமுறை முடிந்து பள்ளிகளை திறப்பதற்கு முன் பள்ளி வளாகத்தினை தூய்மையாக வைத்துக்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளது. பள்ளி திறக்கும் நாள் அன்றே திருத்திய விடைத்தாள்களை மாணவர்களுக்கு அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.