“புதிய டிஎன்பிஎஸ்சி தலைவர் பாஜகவுடன் நெருக்கமானவர்”... பரபரப்பை கிளப்பும் புதிய புகார்
ஐ.ஏ.எஸ். அதிகாரி எஸ்.கே.பிரபாகர் பாஜகவுடன் நெருக்கமானவர் என எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) தலைவர் பதவி நீண்டநாட்கள் நிரப்படாமல் இருந்த நிலையில், வருவாய் நிர்வாக ஆணையராக பணிபுரிந்து வரும் ஐ.ஏ.எஸ். அதிகாரி எஸ்.கே.பிரபாகரை அதன் தலைவராக நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஐ.ஏ.எஸ். அதிகாரி எஸ்.கே.பிரபாகர் பாஜகவுடன் நெருக்கமானவர் என்றும், செயல்திறன் இன்மையால் அவர் உள்துறை செயலாளர் பதவியிலிருந்தும் மாற்றப்பட்டார் எனவும், இத்தகைய நபரை டிஎன்பிஎஸ்சி தலைவராக நியமிக்கப்பட்டிருப்பது வேதனையளிப்பதாகவும் ஆளும் திமுக கூட்டணியில் உள்ள கட்சியின் தலைவர் உள்பட பலரும் குற்றம் சாட்டியுள்ளனர்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் பதவிக்கு தகுதியானவர்கள் பலர் தமிழகத்தில் இருக்கும் நிலையில், தமிழக அரசு ஓய்வுபெற்ற காவல்துறை தலைவர் சைலேந்திர பாபு அவர்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக்க முயற்சித்தது. ஆனால், ஆளுநர் அதற்கு முட்டுக்கட்டை போட்ட காரணத்தால் நீண்ட காலம் அந்த பதவிக்கு யாரையும் பரிந்துரை செய்யாமல் இருந்த நிலையில், தற்போது பாஜக ஆதரவாளர் என கூறப்படும் ஐ.ஏ.எஸ். அதிகாரி எஸ்.கே.பிரபாகரை தலைவராக பரிந்துரை செய்து, ஆளுநரின் ஒப்புதலை பெற்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதன்மூலம் பாஜக ஆதரவாளரை நியமித்து ஆளுநரின் இழுப்பிற்கு திமுக அரசு பணிந்துள்ளது என்பது தெளிவாகின்றது.
திமுக அரசின் பாஜக எதிர்ப்பும், ஆளுநர் எதிர்ப்பும் சமீபகாலமாக சமரசம் செய்யப்பட்டு வருகின்றது. தமிழக மக்களை ஏமாற்ற வெறும் உதட்டளவில் மட்டுமே அந்த எதிர்ப்புகள் உள்ளன. மாறாக பாஜகவுக்கு அனுசரணையான நடவடிவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பதன் உதாரணங்களில் ஒன்றுதான் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) தலைவர் பதவி நியமனம் என்பதை அறிய முடிகிறது.
ஆளும் அரசின் கூட்டணி கட்சி கூறியிருப்பது போன்று சமூகநீதியை செயல்படுத்த வேண்டிய முக்கியமான அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் பொறுப்பை, பாஜக ஆதரவாளருக்கு அளித்திருப்பது வேதனையையும், அச்சத்தையும் ஏற்படுத்துகிறது. ஆகவே, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக சமூகநீதி சிந்தனையுள்ள ஒரு கல்வியாளரை நியமிக்க திமுக அரசு முன்வர வேண்டும். மேலும், தேர்வாணையத்தின் உறுப்பினர்களில் சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த ஒருவரையும் நியமிக்க வேண்டும் என்கிற நீண்டகால கோரிக்கையை செயல்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.