×

உதகையில் 100 ஆண்டுக்கு மேல் செயல்பட்டு வந்த குதிரை பந்தய மைதானத்திற்கு சீல்

 

உதகை மத்திய பேருந்து நிலையம் அருகே 100 ஆண்டுக்கு மேல் செயல்பட்டு வந்த குதிரை பந்தய மைதானத்திற்கு வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். ரூ.822 கோடி குத்தகை பாக்கியை செலுத்தாததை அடுத்து நீதிமன்ற உத்தரவுப்படி குதிரை பந்தய மைதானத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

உதகை மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள சுமார் 52 ஏக்கர் வருவாய் துறைக்கு சொந்தமான நிலத்தை மெட்ராஸ் ரேஸ் கிளப் நிர்வாகம் குத்தகைக்கு எடுத்து அதனை குதிரை பந்தய மைதானம் ஆக மாற்றி ஆண்டு தோறும் கோடை சீசனில் குதிரை பந்தயத்தை நடத்தி வந்தது. இந்தக் குதிரை பந்தயத்தை காண குழந்தைகள் பெண்கள் என அனைவரும் அனுமதிக்கப்பட்டு வந்தனர். நூற்றாண்டுகளை கடந்த இந்த குதிரை பந்தய மைதானத்திற்கான குத்தகை காலம் 1978 ஆம் ஆண்டு முடிவடைந்தது. ஆனால் குத்தகை முடிந்த பிறகும் ரேஸ்கிளப் நிர்வாகம் குத்தகை தொகையை செலுத்தாமல்  இருந்ததுடன் அந்த இடத்தை காலி செய்யாமலும் இருந்து வந்தது. அதனையடுத்து குத்தகை பாக்கியை செலுத்த கோரி மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து நோட்டீஸ் வழங்கியும் ரேஸ்கிளப் நிர்வாகம் கண்டுகொள்ளாமல் இருந்தது.

இதனைடுத்து 2006 ஆண்டு குதிரை பந்தைய மைதானத்தை கையகபடுத்த அனுமதி கோரி நீலகிரி மாவட்ட நிர்வாகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம்  2019 ஆண்டில் குதிரை பந்தயம் மைதானத்தை மீட்க அனுமதி அளித்தது.  அதனை தொடர்ந்து குதிரை பந்தய மைதானத்தை மீட்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. ஆனால் ரேஸ்கிளப் நிர்வாகம் தடை பெற்றதால் மீட்கும் நடவடிக்கையில் தோய்வு ஏற்பட்ட நிலையில் நீலகிரி மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து நீதிமன்றம் மூலம் நிலத்தை மீட்க நடவடிக்கை எடுத்து வந்தது. 

இந்த நிலையில் கடந்த வாரம் முன்பு உதகை குதிரை பந்தய மைதானம் ம் தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது ரேஸ் கிளப் நிர்வாகம் சார்பாக மேல்முறையீடு செய்யப்பட்டிருந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதுடன் அந்த இடத்தை மீட்கவும் உயர் நீதிமன்றம் அனுமதி அளித்தது. அதன் படி  இன்று காலை போலிஸ் பாதுகாப்புடன் சென்ற உதகை கோட்டாட்சியர் மகாராஜா தலைமையிலான அதிகாரிகள்  52.34 ஏக்கர் குதிரை பந்தயம் மைதான நிலத்தை மீட்ட  வருவாய் துறையினர் அங்குள்ள கட்டிடங்களுக்கும் சீல் வைத்த அறிவிப்பு பலகை வைத்தனர். இதனிடையே உதகையில் உள்ள குதிரை பந்தயம் மைதானத்தை நீதிமன்ற உத்தரவுப்படி மீட்டு இருப்பதாகவும் இனிவரும் காலங்களில் அந்த இடம் மாவட்ட நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் எனவும் மாவட்ட ஆட்சித் தலைவர் அருணா தெரிவித்துள்ளார். 822 கோடி குத்தகை செலுத்தாமல் உதகை நகரின் மையப் பகுதியில் செயல்பட்டு வந்த குதிரைப் பந்தயம் மைதானத்தை 46 ஆண்டுகளுக்குப் பிறகு மாவட்ட நிர்வாகம் மீட்டுள்ளதற்கு பல்வேறு தரப்பினர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.