பவதாரிணியின் எதிர்பாராத மறைவு இசையுலகிற்கு ஏற்பட்ட பேரிழப்பு - சீமான் இரங்கல்!!
Jan 26, 2024, 09:26 IST
இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரிணி உடல்நலக் குறைவால் காலமான நிலையில் சீமான் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், இசைஞானி இளையராஜாவின் அன்புமகளும், திரையிசை பாடகியுமான பாசத்திற்குரிய தங்கை பவதாரிணி அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.
தமது தனித்துவமிக்க இனிய குரலால் தமிழ் அள்ளி தந்து, கேட்போர் மனம் மயங்க செய்த குரலரசியின் எதிர்பாராத மறைவு இசையுலகிற்கு ஏற்பட்ட பேரிழப்பாகும்.
பெற்றெடுத்து பேணி வளர்த்த அன்பு மகளை இழந்து வாடும் ஐயா இளையராஜா அவர்களுக்கும், சகோதரியை இழந்துவாடும் தம்பிகள் கார்த்திக் ராஜா, யுவன்சங்கர் ராஜா அவர்களுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், திரையுலக நண்பர்களுக்கும், உலகெங்கும் வாழும் ரசிகர் பெருமக்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரில் பங்கெடுக்கிறேன்.
அன்புத்தங்கை பவதாரிணி அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம்! என்று குறிப்பிட்டுள்ளார்.