மதுவை விற்கும் அரசால் குற்றங்களை எப்படி தடுத்து நிறுத்த முடியும்?- சீமான்

``````````
 
Seeman

இளம்பெண்ணைக் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகளுக்கு சட்டப்படி கடும் தண்டனைப்பெற்றுத்தர வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

seeman

இதுதொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணை அதே பகுதியைச் சேர்ந்த கவிதாசன் அவரது நண்பர்கள் மூவருடன் சேர்ந்து மதுபோதையில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ள செய்தி அதிர்ச்சியையும், பெரும் கோவத்தையும் ஏற்படுத்துகிறது. திமுக ஆட்சிக்கு வந்தது முதல் தமிழ்நாட்டில் பாலியல் வன்கொடுமை நிகழாத நாளே இல்லை என்ற அளவிற்கு பெண்களுக்குப் பாதுகாப்பற்ற பேராபத்தான சூழல் நிலவுகிறது. பட்டப்பகலில் படுகொலைகள், பாலியல் வன்கொடுமைகள், வீடு புகுந்து தாக்குதல், சாலையில் செல்வோர் மீது தாக்குதல், சிறு வியாபார கடைகளைத் தாக்கி உடைப்பது, வழிப்பறி உள்ளிட்ட அனைத்து வன்முறைகளுக்கும் அடிப்படையாக இருக்கும் கட்டுக்கடங்காத கஞ்சா, மது உள்ளிட்ட போதைப்பொருட்கள் புழக்கம் என மக்கள் பாதுகாப்பாக நடமாடமுடியாத அளவிற்கு தமிழ்நாடு மோசமான நிலையை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. 

அனைத்து சமூக குற்றங்களுக்கும் அடிப்படையாக இருக்கும் மது மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை ஒழிக்க முடியாமல் இந்த குற்றங்களை ஒழிக்கவே முடியாது. மதுவையும், போதைப்பொருட்களையும் ஒழிக்கக்கூடிய அதிகாரத்தைக் கையில் வைத்துக்கொண்டு மூன்று ஆண்டுகளாக முதலமைச்சர் உறுதிமொழி மட்டும் எடுத்துக்கொண்டிருப்பது வேடிக்கையாக இருக்கிறது. மதுவை விற்கும் அரசால் குற்றங்களை எப்படி தடுத்து நிறுத்த முடியும்?  அரசே மதுவை  விற்கும் நிலையில் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சகம் என்ற பெயரெதற்கு? மது வழங்கும் ஆயத்தீர்வை அமைச்சகம் என்று பெயரை மாற்றிக்கொள்ள வேண்டியதுதானே?

போதைப்பொருட்களை ஒழித்து சட்டம் ஒழுங்கைச் சீர்படுத்த வேண்டிய  காவல்துறை ஆளும் கட்சியின் அதிகாரக் கண்ணசைவுக்குச் சேவை செய்யும் ஏவல்துறையாகச் செயல்பட்டு எதிர்க்கட்சியினரை, அரசை எதிர்த்துக் கேள்வி கேட்கும் ஊடகவியலாளர்களை, சமூக ஆர்வலர்களை அடக்கி ஒடுக்கி பொய் வழக்கு புனைந்து சிறைப்படுத்துவதையே முழு மூச்சாக செய்து வருகிறது. ஆகவே,  தஞ்சை ஒரத்தநாட்டில் இளம்பெண்ணைக் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த திமுக நிர்வாகி உட்படக் குற்றவாளிகள் அனைவருக்கும் சட்டப்படி கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன” எனக் குறிப்பிட்டுள்ளார்.