விஜய், தன் கட்சிக்கு உலக வெற்றிக் கழகம் என பெயர் வைக்காதது ஏன்..?- சீமான்
விஜய், தன் கட்சிக்கு உலக வெற்றிக் கழகம் என பெயர் வைக்காதது ஏன்..? என தவெக தலைவர் விஜய்க்கு சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், “தமிழக வெற்றிக் கழகம்னு ஏன் பெயர் வைக்கிறீங்க? அகில உலக வெற்றிக் கழகம்னு பெயர் வைக்க வேண்டியதுதானே? உலக அளவில் ரசிகர்கள் வைத்துள்ள விஜய், தன் கட்சிக்கு உலக வெற்றிக் கழகம் என பெயர் வைக்காதது ஏன்? கேரளாவில் அதிக ரசிகர்கள் கொண்டிருக்கும் நீங்கள் ஏன் அங்கு கட்சி ஆரம்பிக்கவில்லை? நான் மிகப்பெரிய கூட்டணி வைத்திருக்கிறேன். 8 கோடி மக்களோடுதான் எனது கூட்டணி. பொழுதுபோக்கு தளத்தில் தலைவர்களை தேடுபவர்கள் அல்ல, என்னை பின்பற்றுபவர்கள். போராட்டக்களத்தில் தலைவனை தேடும் மக்கள்தான் என்னை பின்பற்றுபவர்கள்.
என் அளவுக்கு உலக அரசியல் வரலாற்றில் தோற்றவன் கிடையாது. 2 சட்டமன்ற தேர்தல், 2 பாராளுமன்ற தேர்தல், 10-க்கும் மேற்பட்ட இடைத் தேர்தல், 2 உள்ளாட்சிதேர்தல் என இத்தனை முறை தோற்ற கட்சி மறுபடியும் தனித்து போட்டியிடுகிறது. தோல்வியா... போடா... என் கால்களை நம்பி தான் என் பயணம், அடுத்தவர்கள் கால்களை நம்பி அல்ல. ஜெயலலிதா, கருணாநிதி காலத்தில் அவர்களை எதிர்த்தே அரசியலுக்கு வந்தவன் நான்... ஜெயலலிதா, கருணாநிதியை விட விஜய் என்ன பெரிய தலைவரா? இல்ல அவங்களைவிட பெரிய கூட்டம் இவருக்கு வந்துவிட்டதா? ” எனக் கேள்வி எழுப்பினார்.