×

பாகிஸ்தானில் வசிக்கும் தமிழர்கள் தமிழ்நாட்டுக்குள் வர அனுமதி தருக! புது சர்ச்சையை கிளப்பும் சீமான்

 

பாகிஸ்தானில் வசிக்கும் தமிழ்ச்சொந்தங்கள் மீண்டும் தமிழ்நாட்டிற்கு வந்து தங்கள் உறவுகளைக் கண்டு மகிழ்ந்து, பாதுகாப்பாகத் திரும்பி செல்வதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியா - பாகிஸ்தான் ஒரே நாடாக இருந்தபோது தமிழர் நிலத்தில் இருந்து தமிழர்கள் இந்தியா முழுவதும் பரவி வாழ்ந்தது போல அன்றைய பாகிஸ்தான் எல்லைக்குள்ளும் புலம்பெயர்ந்து வாழ்ந்து வந்தனர். 1947 ஆம் ஆண்டு இந்தியாவும் பாகிஸ்தானும் தனித்தனி நாடுகளாகப் பிரிக்கப்பட்டபோது அவர்கள் தங்களது உறவுகளை இழந்து பாகிஸ்தானிலேயே நிரந்தமாக வாழ வேண்டியதாயிற்று. 

பல தலைமுறைகளைக் கடந்து இன்றுவரை பல ஆயிரக்கணக்கான தமிழர்கள் பாகிஸ்தானிலேயே வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் தமிழ்நாட்டில் உள்ள தங்கள் உறவுகளை ஆண்டிற்கு ஒருமுறையாவது வந்து சந்தித்து அளவளாவ வேண்டும் என்ற பெருவிருப்பத்தைத் தொடர்ச்சியாகத் தெரிவித்து வருகின்றனர். ஐயா மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது ஒரேஒரு முறை அனுமதி அளிக்கப்பட்டது என்றும், அதன்பின்னர் இதுவரை அனுமதி வழங்கப்படாமலேயே உள்ளது என்ற செய்தி பெரும் வேதனையைத் தருகிறது.

எனவே, உலகெங்கும் பரவி வாழும் தமிழர்களுக்கான தாய்மடியாகத் திகழும் தமிழ்நாட்டினை ஆளும் திமுக அரசு, இவ்விவகாரத்தில் இந்திய ஒன்றிய அரசின் அனுமதியைப் பெற்று, பல ஆண்டுகளாகப் பிரிந்து தவித்துவரும் தமிழ்ச்சொந்தங்கள் மீண்டும் தமிழ்நாட்டிற்கு வந்து தங்கள் உறவுகளைக் கண்டு மகிழ்ந்து, பாதுகாப்பாகத் திரும்பி செல்வதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நாம் தமிழர் கட்சி சார்பாகக் கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.