கல்லூரி மாணவியை பலாத்காரம் செய்த அன்பில் மகேஷ் ஓட்டுநர்! நடவடிக்கை எடுக்க சீமான் வலியுறுத்தல்
திருச்சியில் இளம்பெண்ணை கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கி, தொடர்ந்து மிரட்டி வந்த குற்றவாளிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருச்சி மாவட்டம், சிறுமருதூர் கிராமத்தைச் சேர்ந்த சிலம்பரசன் எனும் நபரும், அவரது நண்பர்களும் சேர்ந்து கல்லூரி மாணவி ஒருவரை கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கி, அதனைக் காணொலிப்பதிவு செய்து மிரட்டி வந்த கொடுஞ்செயல் தெரிய வருகிறது. காதலிப்பதாகக் கூறி ஏமாற்றி இக்கொடுஞ்செயலில் ஈடுபட்டதோடு, அதனைக் காணொலிப்பதிவும் செய்து வெளியிட்டுவிடுவதாக மிரட்டி, அதைக் கொண்டு நண்பர்களோடு மீண்டும் பலமுறை இக்கொடுஞ்செயலைச் செய்தது செய்தியாக வந்த நிலையிலும் கூட இதுகுறித்து அரசும், காவல்துறையும் குறிப்பிடும்படியான எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது கடும் கண்டனத்திற்குரியதாகும்.
மேலும், அப்பெண் கருவுற்று, பின் குற்றவாளிகளால் அக்கரு கலைக்கப்பட்ட நிலையில் அப்பெண்ணும் அவரது தாயாரும் திருச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளனர். முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தன்னுடைய நேரடிக் கட்டுப்பாட்டில் காவல்துறையினை வைத்திருந்தும் தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீரழிவுகளும், பெண்களுக்கு எதிரான குற்றங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் அவலநிலை உள்ளது. ஒருவேளை, செயல்திறன் கொண்ட நபருடைய கட்டுப்பாட்டில் காவல்துறை இருந்திருந்தால் சட்டம்-ஒழுங்கு இவ்வளவு சீரழிந்திருக்காது. ஐயா ஸ்டாலின் அவர்கள்தான் செயல்படாமல் உள்ளாரோ என்ற சந்தேகத்தையும் எழுப்புகிறது.
இக்குற்றவாளிகளின் பின்னணியில் ஆளும் கட்சியின் அரசியல் தலையீடு இருக்குமோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. குறிப்பாக, பாதிக்கப்பட்ட பெண்ணே, குற்றம் சுமத்தப்படும் நபர் தமிழ்நாடு கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களின் ஓட்டுநராக இருப்பதாக கூறியுள்ளார். இதற்கு அமைச்சரும் முன்வந்து விளக்கமளித்திட வேண்டும். அரசியல் பின்புலம் கொண்டு எந்தக் குற்றம் செய்தாலும் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிவிடலாம் என்கிற போக்கு குற்றவாளிகளிடையே அண்மைக் காலங்களில் பெருகி வருகிறது.
எனவே, தமிழ்நாடு அரசு எவ்வித கேள்விக்கும் இடமளிக்காத வகையில் உடனடியாக நடவடிக்கை எடுத்திட வேண்டும். சமூக வலைதளங்களில் கருத்து பதிவிடுபவர்கள் மீது காட்டும் வேகத்தில் சிறிய அளவாவது கொடூரக் குற்றங்கள் நிகழ்த்தும் குற்றவாளிகள் மீதும் தமிழ்நாடு காவல்துறை காட்டிட வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உண்டான மருத்துவ உதவிகளை தமிழ்நாடு அரசு வழங்கிட வேண்டும். மேலும், இக்குற்ற சம்பவத்தில் தொடர்புடைய அனைவர் மீதும் உரிய விசாரணை மேற்கொண்டு கடும் தண்டனை வழங்கிட வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசினை நாம் தமிழர் கட்சியின் சார்பாக வலியுறுத்துகிறேன். எவ்வித நடவடிக்கையும் இன்றி தொடர்ந்து பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பெருகி வரும் நிலையில் தமிழ்நாடு அரசுக்கு எதிராக மாநிலம் தழுவிய போராட்டங்களை நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கும் என்றும் எச்சரிக்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.