×

‘தலேமா’ தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு உரிய ஊதியம் வழங்குக- சீமான்

 

சேலம் ‘தலேமா’ மின்னணு நிறுவனத்தின் தொழிலாளர் விரோதப்போக்கினைத் தடுத்து, ஊழியர்களின் உரிமைகளைப் பெற்றுத்தர வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சேலம் ‘தலேமா’ தனியார் மின்னணு உற்பத்தி தொழிற்சாலை, அங்குப் பணிபுரியும் ஊழியர்களுக்கு உரிய ஊதியம் உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் ஏதும் கொடுக்காமல் பல ஆண்டுகளாக ஏமாற்றி வருவது வன்மையான கண்டனத்துக்குரியது. நிறுவனத்தின் தொழிலாளர் விரோதச் செயல்பாடுகளைத் தடுத்து நிறுத்தக்கோரி, தொழிலாளர்கள் தரப்பில் பலமுறை புகாரளித்தும், பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தும் தமிழ்நாடு அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் காலம் கடத்தி வருவது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது.

ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த தலேமா நிறுவனம் கடந்த 32 ஆண்டுகளாக சேலம் மாவட்டத்தில் 500 நிரந்தர ஊழியர்களுடன் செயல்பட்டு வருகிறது. கடந்த 2021ஆம் ஆண்டு சுவீடன் நாட்டைச் சேர்ந்த ‘காமிக்’ என்ற பன்னாட்டுக் கூட்டிணைவு நிறுவனம் சேலம் ‘தலேமா’ நிறுவனப் பங்குகளை வாங்கிய பிறகு, ஊழியர்களின் உரிமைகள் பறிக்கப்படும் கொடுமைகள் தொடர்ச்சியாக அரங்கேறி வருகின்றன. மேலும், தமிழ்நாடு அரசிடம் முறைகேடாக லே ஆப் (பொருளாதார மந்தநிலை காரணமான ஆட்குறைப்பு) அனுமதிபெற்று, ஊதிய உயர்வு மற்றும் இதர அடிப்படை உரிமைகளை வழங்க மறுப்பது, பணி நீக்கம் செய்வது என ஊழியர்களின் வாழ்வாதாரத்தை மெல்ல மெல்ல சிதைத்தும் வருகிறது. இதுகுறித்து அங்குப் பணிபுரியும் ஊழியர்கள் தமிழ்நாடு தொழிலாளர் நல ஆணையத்திடம் பலமுறை புகாரளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது மிகப்பெரிய கொடுமையாகும்.

ஆகவே, தமிழ்நாடு அரசு சேலம் ‘தலேமா’தனியார் மின்னணு நிறுவனத்தின் தொழிலாளர் விரோதச் செயல்பாடுகளைத் தடுத்து நிறுத்தி, ஊதிய உயர்வு உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் அனைத்தும் அங்குப் பணியாற்றும் ஊழியர்களுக்கு மீண்டும் கிடைத்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.