×

‘நில ஒருங்கிணைப்பு சட்டத்தை வாபஸ் பெற வேண்டும்'- சீமான்

 

தனியாருக்கு நிலம் கையகப்படுத்துவதற்கு ஏதுவாக திமுக அரசு கொண்டுவந்துள்ள தமிழ்நாடு நில ஒருங்கிணைப்புச் சட்டம் மற்றும் அதன் விதிகளை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தொடர் எதிர்ப்பின் நடுவிலும் தமிழ்நாடு நில ஒருங்கிணைப்புச் சட்டம் மற்றும் அதன் விதிகளைச் செயல்பாட்டிற்குக் கொண்டு வந்துள்ள திமுக அரசின் செயல் கடும் கண்டனத்திற்குரியதாகும். சென்ற ஆண்டு ஏப்ரல் மாதம் "தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு சட்டம் 2023" தமிழ்நாடு அரசினால் இயற்றப்பட்டது. அதன் தொடர்ச்சியாக "தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு விதிகள் 2024" தற்போது வெளியிடப்பட்டு அவை செயல்பாட்டுக்கு வந்துள்ளன. நூறு பரப்பலகு அளவிற்குக் குறையாத நிலப்பரப்பு கொண்ட திட்டங்கள் அனைத்திற்கும் அவற்றுள் நீர்நிலைகள் இருப்பின் நிபந்தனைகளையும் கடந்து நிலம் கையகப்படுத்துவதற்கு வழிவகை செய்யக்கூடிய சட்டமே இதுவாகும். இயற்கையாக நீர்நிலைகள் தன் வழித்தடத்தினை மாற்றிக் கொள்ளும் நிலையில் அவை தனியார் நிலங்களில் அமையப்பெற்றால் அவற்றைப் பாதுகாக்கும் பொருட்டு இச்சட்டம் கொண்டுவரப்படுவதாகச் சொல்லப்பட்டாலும், இச்சட்டத்தினை முழுமையாக ஆராய்கையில் இது வளர்ச்சி என்கின்ற பெயரில் திட்டங்களை முன்மொழியக் கூடியவர்களுக்கு நிலத்தினைக் கையகப்படுத்தி தருவதற்கான செயல்முறையாகவே தெரிகிறது.

அண்மையில் வெளிவந்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பில்கூட இந்திய அரசமைப்பு சட்டத்தின் உறுப்பு 39(ஆ) அடிப்படையில் அனைத்துத் தனிநபர் நிலங்களும் அரசு கையகப்படுத்துவதற்கு உட்பட்டதா என்ற கேள்வியில், அனைத்து தனிநபர் நிலங்களும் 39(ஆ) வரையறைக்குள் அடங்காது என்று தீர்ப்பளித்ததன் வழியே, தனிநபருக்கு நிலத்தின் மீது இருக்கக்கூடிய உரிமையை உறுதி செய்தது மட்டுமின்றி, காடுகள் மற்றும் நீர்நிலைகள் சமூகத்தின் இன்றியமையாதவை என்பன குறித்த கருத்தும் பதிவு செய்யப்பட்டிருந்தது. குறிப்பாகக் "காடுகள், குளங்கள், சதுப்பு நிலங்கள் மற்றும் வளங்களைக் கொண்ட நிலங்கள் ஆகியவற்றில் தனிநபர் உரிமை இருக்கலாம். எவ்வாறாயினும், இந்த வளங்களின் தன்மையைத் தக்கவைத்துக்கொள்வதில் சமூகம் ஒரு முக்கிய ஆர்வத்தைக் கொண்டிருப்பதால், அவை  'சமூகத்தின் பொருள் வளங்கள்' என்ற வரம்பில் அடங்கும்." என்ற கருத்தினை உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.

தமிழ்நாடு அரசோ இது போன்ற அடிப்படைக் கோட்பாடுகளுக்கு நேர் எதிராக, ஒருபுறத்தில் பூர்வகுடி மக்களின் தனிநபர் நில உரிமையைப் பறித்தும், மறுபுறத்தில் பொது உடமையாக இருக்கக்கூடிய, இருக்க வேண்டிய, நீர்நிலைப் பகுதிகளைத் தனியாருக்குத் தாரை வார்க்கும் விதமாகச் சட்டம் இயற்றியும் வருகிறது. அதானி, அம்பானி போன்ற பெருமுதலாளிகளுக்கு நன்மை அளிக்கும் விதத்தில் சூழலியல் விதிகளை மாற்றி அமைத்து, சூழலியல் சீர்கேட்டிற்கு ஒன்றிய அளவில் பாஜக அரசு வழிவகை செய்தது போல, மாநில அளவில் சூழலியல் விதிமுறைகள் நீர்த்துப்போகச் செய்யும் செயலினை திமுக அரசு செய்து வருகிறது. சூழலியல் கோட்பாட்டில் பாஜக மாடலைப் பின்பற்றுவதாகத் திராவிட மாடல் அரசு இருப்பது வெட்டவெளிச்சம் ஆகிறது. தங்கள் நில உரிமைக்காகப் போராடும் பூர்வகுடி மக்களைச் சந்தித்து அவர்களின் குறையைக் கேட்காத அரசு அவர்களின் மீது வழக்குகளைப் பாய்ச்சியும், கைது நடவடிக்கைகளில் ஈடுபட்டும் வருகிறது. தற்போது அரசு தன்னுடைய எதேச்சதிகாரப் போக்கினை மேலும் எளிமையாகக் கையாளச் சட்டங்களையும் செயல்படுத்தி வருவது அடிப்படை மக்களாட்சிக் கோட்பாட்டிற்கு எதிரான செயலாகும்.

பாசிச எதிர்ப்பிற்கு தாங்கள்தான் காப்புரிமை பெற்றவர்கள் போல போலி பிம்பத்தினைக் கட்டமைத்து வைத்திருக்கும் திமுக அரசோ தமிழ்நாட்டிற்குள் பாசிச போக்கில் செயல்பட்டு வருகிறது. போலி பாஜக எதிர்ப்பினைக் காட்டி தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றி வரும் திமுக அரசு இனியாவது பாஜக அரசின் கொடுங்கோன்மை போக்கினைப் பின்பற்றாமல் தமிழ்நாட்டு மக்களின் நலன் கருதி உடனடியாக, "தமிழ்நாடு நில ஒருங்கிணைப்புச் சட்டம் 2023" மற்றும் அதன் விதிகளைத் திரும்பப் பெற வேண்டும் என்று இவ்வறிக்கையின் வாயிலாக வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.