×

"உயிரிழந்த பாகனின் மனைவிக்கு கல்வி தகுதிக்கு ஏற்ப பணி வழங்கப்படும்"- சேகர்பாபு

 

திருச்செந்தூரில் கோயில் யானை தாக்கி பாகன் உட்பட 2 பேர் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ள யானை தெய்வானைக்கு கரும்பு வழங்கி ஆசி பெற்றார் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு. 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, “திருச்செந்தூர் கோவில் யானை தாக்கி பாகன் உட்பட இரண்டு பேர் இறந்த சம்பவம் என்பது எதிர்பாராத நடந்த துயர சம்பவமாகும். யானைத்தாக்கி உயிரிழந்த பாகன் உதயகுமார் குடும்பத்திற்கு முதல்வர் நிவாரண நிதி ரூ.2 லட்சமும், திருக்கோயில் சார்பாக 5 லட்சமும் கோவில் தக்கார் அருள்முருகன் சார்பில் மூன்று லட்சம் என மொத்தம் பத்து லட்சமும் அவரது குடும்பத்தினருக்கு காசோலையாக வழங்கப்பட்டுள்ளது.  அதேபோல் உதயகுமாரின் உறவினரான சிசுபாலன் குடும்பத்தினருக்கு 5 லட்சத்திற்கான காசோலை வழங்கப்பட்டுள்ளது. உயிரிழந்த பாகன் உதயகுமாரின் மனைவிக்கு கோவில் நிர்வாகத்தில் அவரது படிப்புக்கு தகுந்த வேலை வழங்க தமிழக முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். உதயகுமாரின் மனைவி மற்றும் அவர்களது குழந்தைகள் படிப்பு மற்றும் குடும்ப செலவுக்கு தேவையான அனைத்தையும் இந்த மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஏற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ளனர்.

பாகன் உயிரிழந்த 10 நிமிடத்தில் யானை சுய நினைவுக்கு திரும்பிவிட்டது. தற்போது யானை தெய்வானை நலமுடன் உள்ளது. கோயிலில் நடந்த சம்பவத்தில் ஒளிவு மறைவின்றி அனைத்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கால்நடைத்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் இன்னும் ஒரு வாரம் தனது கட்டுப்பாட்டுக்குள் யானையை வைத்துள்ளனர். யானை தாக்கிய சிசிடிவி காட்சிகள் விரைவில் வெளிவர இருக்கிறது. அதில் அவர்கள் செல்பி எடுத்து எடுக்கும்போதுதான் இந்த துயர சங்கம் நடந்திருக்கிறது. அதை அந்த யானை விரும்பவில்லை என்று நினைக்கிறேன். ஐந்து நிமிடங்களில் நடந்த சம்பவம் தான் இது. எதிர்பாராமல் நடந்த சம்பவம் துயர சம்பவம் இது. யானையை 5 துறை சார்ந்த குழு தொடர்ந்து கண்காணித்து வருகிறது” என்றார்.