×

தொப்புள் கொடியை வெட்டிய இர்ஃபான் : விசாரணையை தொடங்கிய செம்மஞ்சேரி போலீஸ்..!

 

குழந்தையின் தொப்புள் கொடியை கத்தரிக்கோலால் வெட்டும் வீடியோவை வெளியிட்டுள்ள யூடியூபர் இர்ஃபான் மீது  நடவடிக்கை எடுக்கக்கோரி காவல்நிலையத்தில் புகார் ஆளிக்கப்பட்டுள்ளது. 

பிரபல யூடியூபர் இர்பான் கடந்தாண்டு ஹசீஃபா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.  ஹசீஃபா - இர்பான் தம்பதிக்கு கடந்த ஜூலை 24ம் தேதி பெண் குழந்தை பிறந்துள்ளது.  முன்னதாக ஹசீஃபா இர்பான் துபாய்க்கு மனைவியை அழைத்து சென்று கருவில் இருக்கும் குழந்தையின் பாலினம் பற்றி தெரிந்து கொண்டதோடு அதனை வீடியோவாக அவர் தனது யூடியூப் சேனலில் வெளியிட்டிருந்தார். இந்த விவகாரம்  சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இர்பானுக்கு விளக்கம் கேட்டு சுகாதாரத்துறை சார்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டது. உடனே இர்பான் சம்பந்தப்பட்ட வீடியோவை டெலிட் செய்ததுடன், இச்செயலுக்காக மன்னிப்பு கோரினார்.  

அதன்பின்னர் இந்த விவகாரம் சற்று ஓய்ந்திருந்த நிலையில் இர்ஃபான் மீண்டும் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார்.  பிரசவத்தின்போது அறுவை சிகிச்சை அரங்கில் மனைவியுடன் இருந்தபோது, குழந்தையின் தொப்புள் கொடியை இர்ஃபான் வெட்டியுள்ளார். அதனை வீடியோவாக பதிவுசெய்து தனது யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ளார். இது மீண்டும் சர்ச்சையாக வெடித்த நிலையில்,  இது மருத்துவ விதிகளின் படி குற்றம் என மருத்துவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக ஊரக நலப்பணிகள் இயக்குனரகத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் டிஎம்எஸ் மருத்துவமனை மற்றும் இர்ஃபானிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.  

 கடந்த 2 நாட்களாக  சம்மந்தப்பட்ட தனியார் மருத்துவமனையிடமும், தொப்புள் கொடியை வெட்டுவதற்கு அனுமதித்த மருத்துவர் நிவேதிதா உள்ளிட்டோர் தொடர்பாக மருத்துவத்துறை இயக்குனர் சார்பில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.  இதனிடையே மருத்துவத்துறை விதிகளை மீறி செயல்படும் இர்ஃபான் மீது காவல்துறையிலும் புகார் அளித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்  மருத்துவத்துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.  அதனடிப்படையில் செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் மருத்துவத்துறையின் இணை இயக்குனர் இளங்கோவன் புகார் அளித்தார். யூடியூபர் இர்பான் மீதும் இந்த நிகழ்விற்கு அனுமதி அளித்த மருத்துவர் நிவேதிதா மீதும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக செம்மஞ்சேரி போலீஸார் விசாரணையை தொடங்கியுள்ளனர். இது தொடர்பான ஆவணங்களை மருத்துவத்துறை தரப்பிலிருந்து பெற்று  பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்ய போலீசார் திட்டமிட்டிருக்கின்றனர். மேலும், ஆபரேசன் தியேட்டரில் அன்று பணியில் இருந்தவர்களின் விவரங்களையும் போலீசார் சேகரித்துள்ளனர்.