செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 58-வது முறையாக நீட்டிப்பு
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 58வது முறையாக நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி சட்ட விரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில், அமலாக்கத்துறையால் கடந்தாண்டு ஜூன் மாதம் 14ம் தேதி கைது செய்யப்பட்டார். அவருடைய காவல் நீட்டிக்கப்பட்டுவரும் நிலையில், பலமுறை ஜாமீன் கோரி அவர் அளித்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதனால் ஓராண்டுக்கும் மேலாக சிறையிலேயே காலம் தள்ளி வரும் அவர், பலமுறை உடல்நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி காணொலி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது சிட்டி யூனியன் வங்கியின் கரூர் கிளையின் தலைமை மேலாளராக பணியாற்றிய ஹரிஷ்குமாரிடம் செந்தில் பாலாஜி தரப்பில் குறுக்கு விசாரணை செய்தது. இதனைக்கேட்ட சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி, செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை செப்டம்பர் 5ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.