×

செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிப்பது சரியல்ல: உயர்நீதிமன்றம்

 

அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்ய  முதலமைச்சருக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. 

சட்டவிரோத பணப்பறிமாற்ற வழக்கு தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது உறவினர்களுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்திய நிலையில், சோதனையின் முடிவில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். தற்போது அவர் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் உள்ளார். இதனிடையே அவர் வகித்து வந்த இலாக்கக்கள் அமைச்சர் முத்துச்சாமி மற்றும் அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், அவர் இலாகா இல்லாத அமைச்சராக நீடித்து வருகிறார். 

இந்த சூழலில்  செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், இலாகா இல்லாத அமைச்சராக செந்தில்பாலாஜி நீடிக்க வேண்டுமா என்பதை முதல்வர்தான் முடிவெடுக்க வேண்டும். எந்த இலாகாவும் இல்லாமல் அமைச்சராக தொடர பலனும்  இல்லை. செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்வது தார்மீக ரீதியாக தவறு. எனவே அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்யலாம் என முதலமைச்சருக்கு தலைமை நீதிபதி அறிவுறுத்தினார்.