×

செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில் இன்று தீர்ப்பு!! 

 

சட்டவிரோத பணப்பறிமாற்ற வழக்கு தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது உறவினர்களுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்திய நிலையில், சோதனையின் முடிவில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். தற்போது அவர் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் உள்ளார். இதனிடையே அவர் வகித்து வந்த இலாக்கக்கள் அமைச்சர் முத்துச்சாமி மற்றும் அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், அவர் இலாகா இல்லாத அமைச்சராக நீடித்து வருகிறார். 

இந்த சூழலில்  செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் போது ஆளுநர் மாளிகைக்கு உத்தரவிட நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளதா என்பதை எழுத்துப்பூர்வமாக மனுதாரர் தாக்கல் செய்ய வேண்டும் என  நீதிபதிகள் உத்தரவிட்டிருந்த நிலையில், மனு தாரர் இது தொடர்பான எழுத்துப்பூர்வை பதிலை தாக்கல் செய்தார். 

இந்நிலையில் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு வழங்குகிறது சென்னை உயர்நீதிமன்றம். வழக்கறிஞர் எம்.எல்.ரவி. மற்றும் முன்னாள் எம்.பி. ஜெயவர்தன் ஆகியோர் தொடர்ந்த மனு மீது இன்று தீர்ப்பு வழங்குகிறது தலைமை நீதிபதி கங்காபூர்வாலா, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு.