சவுக்கு சங்கருக்கு ஜாமீன்.. ஆனாலும் வெளியே வர முடியாத நிலை...
பிரியாணி கடை உரிமையாளரிடம் பண மோசடி செய்த வழக்கில் சவுக்கு சங்கருக்கு ஜாமீன் வழங்கி கரூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கரூர் மாவட்டம் காந்தி கிராமம் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். பிரியாணி கடை நடத்தி வரும் இவருக்கும், சவுக்கு சங்கரின் யூடியூப் சேனலில் பணியாற்றி வரும் விக்னேஷ் என்பவரும் இடையே பழக்கம் இருந்து வந்துள்ளது. அப்போது சவுக்கு சங்கரின் யூடியூப் சேனலில் பிரியாணி கடை குறித்து விளம்பரம் செய்தால், கடை ஃபேமஸ் ஆகும் எனவும் வியாபாரம் அதிகரிக்கும் எனவும் ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதனை நம்பி விக்னேஷ் கேட்ட ரூ.7 லட்சத்தை , கிருஷ்ணன் அவரிடம் கொடுத்துள்ளார். ஆனால் சொன்னது போல் விளம்பரம் எதுவும் வராததால், விக்னேஷிடம் பணத்தை திருப்பி கேட்டபோது ஆபாச வார்த்தைகளால் திட்டியிருக்கிறார். இதனையடுத்து கிருஷணன் ரூ. 7 லட்சம் பெற்றுகொண்டு மோசடியில் ஈடுபட்டதாக கரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில் விக்னேஷிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த மோசடியில் சவுக்கு சங்கருக்கும் தொடர்பிருப்பது தெரியவந்து அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. முன்னதாக தேனி மாவட்டத்தில் தங்கியிருந்தபோது யூ-டியுபர் சவுக்கு சங்கர், தனது அறையில் 2.5 கிலோ கஞ்சா வைத்திருந்ததாக பழனிசெட்டிபட்டி காவல்துறையினர் தரப்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கில் முதலில் கோவை மத்திய சிறையில் இருந்த அவர் பின்னர் சென்னை உயர்நீதிமன்ற விசாரணைக்காக புழல் சிறைக்கு மாற்றப்பட்டார். இந்த வழக்கில் சவுக்கு சங்கருக்கு 6வது முறையாக ஜூலை 30ம் தேதி வரை நீதிமன்ற காவலை நீடித்து மதுரை மாவட்ட போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த போதைப்பொருள் வழக்கில் சவுக்கு சங்கர், ஜாமீன் கோரி ஏற்கனவே தாக்கல் செய்த 2 மனுக்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், 3வது முறையாக தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுவும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் தான் கடந்த 9ம் தேதியன்று பண மோசடி வழக்கில் ஆஜராக புழல் சிறையில் இருந்து கரூர் மாவட்ட நீதிமன்றத்திற்கு சவுக்கு சங்கர் அழைத்து வரப்பட்டார். அப்போது 4 நாட்கள் போலீஸ் காவலுக்கு அனுமதிக்கப்பட்டது. பின்னர் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் ஜூலை 23 வரை நீதிமன்ற காவல் விதித்து நீதிபதி பரத்குமார் உத்தரவிட்டார். இந்த நிலையில் இன்று நீதிமன்ற காவல் முடிந்து கரூர் மாவட்ட நிதிமன்றத்தில் யூடியூபர் சவுக்கு சங்கர் ஆஜர்படுத்தப்பட்டார். ஏற்கனவே இந்த வழக்கில் அவர் ஜாமீன் கோரியிருந்த நிலையில், சவுக்கு சங்கருக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.
இந்த வழக்கில் சவுக்கு சங்கருக்கு ஜாமீன் கிடைத்தாலும், பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசியது, கஞ்சா வைத்திருந்தது, கிளாம்பாக்கம் பேருந்துநிலையம் குறித்து அவதூறு பரப்பியது, நீதிமன்றத்தில் பணி புரியும் பெண் பணியாளர்கள் குறித்து அவதூறு பேசியது என அவர் மீது ஏராளமான வழக்குகள் நிலுவையில் இருப்பதால் அவரால் வெளியே வர முடியாக சூழல் நிலவுகிறது.