×

நகைப்பிரியர்களுக்கு ஷாக்..! 4 நாட்களுக்குப் பிறகு அதிரடியாக எகிறிய தங்கம் விலை..  

 

மத்திய பட்ஜெட்  எதிரொலியாக கடந்த 4 நாட்களாக சரிந்து வந்த தங்கத்தின் விலை  இன்று (சனிக்கிழமை) அதிரடியாக  ஏற்றம் கண்டுள்ளது. 

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024 - 2025ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்  கடந்த 23ம் தேதி தாக்கல் செய்தார்.  அதில் தங்கம், வெள்ளி மற்றும் பிளாட்டினத்திற்கான சுங்க வரி குறைக்கப்பட்டுள்ளது. அதாவது, தங்கம், வெள்ளி மீதான சுங்க வரி 15%ல் இருந்து 6% ஆக குறைக்கப்பட்டிருக்கிறது.  இதன் எதிரொலியாக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நாள் கடந்த 4 நாட்களாக தங்கம் மற்றும் வெள்ளி விலை தொடர்ந்து அதிரடியாக குறைந்து வந்தது. குறிப்பாக கடந்த 4 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.3,160 குறைந்தது நகைப்பிரியர்கள், நடுத்தர வர்க்கத்தினரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அதேநேரம்  இந்த நாட்களில் தங்கத்தில் முதலீடு செய்தவர்களுக்கு ரூ.10.7 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 


 
இருப்பினும் தொடர்ந்து தங்கம் விலை குறையவே வாய்ப்புள்ளது; ஆடி பதினெட்டுக்குப் பிறகு கணிசமாக விலை ஏற்றம் காணும் எனவும்  நகை வியாபாரிகள் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட 4 நாட்களுக்குப் பிறகு தங்கம் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ.400 அதிகரித்துள்ளது.  நேற்றைய தினம் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 120 குறைந்து 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரன் ரூ.51,320க்கும்,  கிராமுக்கு ரூ.15 குறைந்து ஒரு கிராம் ரூ.6,415க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலை கிராமுக்கு 89 ரூபாய்க்கு விற்கப்பட்டது. 

வார இறுதி நாளான ( சனிக்கிழமை) இன்று சென்னையில்  22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6465-க்கும், பவுனுக்கு ரூ.400 அதிகரித்து ஒரு பவுன் ரூ.51,720-க்கும் விற்பனையாகிறது. வெள்ளியின் விலை மாற்றமில்லாமல் சில்லறை விற்பனையில் ஒரு கிராம் ரூ.89-க்கு விற்பனையாகிறது.