அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு; சென்னையில் இன்று முதல் கடையடைப்பு!
கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கையாக சென்னையில் 9 இடங்களில் இன்று முதல் கடைகள் அடைக்கப்படுகின்றன.
தமிழகத்தில் குறைந்திருந்த கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த சில நாட்களாக மீண்டும் அதிகரித்துள்ளது. இதனால் புதிதாக தளர்வுகள் ஏதும் இன்றி ஆகஸ்ட் 9ஆம் தேதி காலை 6 மணி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா கட்டுபாட்டு நடவடிக்கையாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்களே மக்கள் அதிகமாக கூடும் இடங்களுக்கு தடை விதிக்கலாம் என முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்திருந்தார். அதன் படி, சென்னையில் 9 இடங்களில் வணிக வளாகங்கள், கடைகள் உள்ளிட்டவை இயங்க மாநகராட்சி தடை விதித்துள்ளது.
இன்று முதல் வரும் 9ஆம் தேதி காலை 6 மணி வரை கடைகளை திறப்பதற்கான தடை தொடரும் என்றும் மாநகராட்சி தெரிவித்துள்ளது. சென்னையில் மக்கள் அதிகமாக கூடும் முக்கிய இடங்களான ரங்கநாதன் தெரு உஸ்மான் சாலை முதல் மாம்பலம் ரயில் நிலையம் வரை அனைத்து கடைகளும் இன்று காலை முதல் மூடப்பட்டுள்ளன. அதே போல புரசைவாக்கம் டவுட்டன் சந்திப்பு முதல் பெல்ஸ் சாலை வரையிலும் அபிபுல்லா தெரு, புலிபோன் பஜார் வணிக வளாகம், ராயபுரம் கல்மண்டபம், அமைந்தகரை சந்தை உள்ளிட்ட அனைத்தும் மூடப்பட்டுள்ளது.