×

சீதாராம் யெச்சூரி உடல் தானம்

 

மறைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி உடல் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்படுகிறது.

ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்ட சீதாராம் யெச்சூரி, சென்னையில் 12.08.1952 அன்று பிறந்தார். டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்திலும், ஆந்திராவிலும் கல்வி பயின்ற சீத்தாராம் யெச்சூரி, மாணவப் பருவத்திலேயே கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் பிரிவான இந்திய மாணவர் சங்கக் கூட்டமைப்பில் இணைந்து கட்சி வளர்ச்சிக்காக அரும்பாடு பட்டார். இந்தியாவில் நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டு, ஜனநாயக உரிமைகள் பறிக்கப்பட்டு, மிசா கொடுமைகள் அரங்கேற்றம் செய்யப்பட்டபோது அதனை எதிர்த்து மாணவர் சக்தியைத் திரட்டிப் போராடினார். அதன் காரணமாக கைது செய்யப்பட்டு, சிறையிலும் அடைக்கப்பட்டார். கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினராகவும், பொலிட் பீரோ உறுப்பினராகவும் சிறப்புடன் பணியாற்றியவர். நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகவும் 2005 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரை இவர் பணியாற்றினார்.

அகில இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளரான சீதாராம் யெச்சூரி, 72 வயதில் இன்று டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நலக் குறைவு காரணமாக இயற்கை அடைந்தார். இளம் வயதிலிருந்தே பொதுவுடைமை இயக்கத்தில் ஈடுபாடு கொண்டிருந்த சீதாராம் யெச்சூரியின் உடல் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்படுகிறது. கற்பித்தல், ஆராய்ச்சி நோக்கத்துக்காக யெச்சூரி உடலை அவரது குடும்பத்தினர் தானம் செய்துள்ளனர்.