×

டிஎன்பிஎஸ்சி தலைவராக எஸ்.கே.பிரபாகர் பொறுப்பேற்பு.. தேர்வர்களுக்கு குட் நியூஸ்.. 

 

டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தலைவராக எஸ்.கே.பிரபாகர் பொறுப்பேற்றுள்ளார்.  

கடந்த 2022ம் ஆண்டு முதல் டிஎன்பிஎஸ்சியின் தலைவராக இருந்த பாலச்ச்ந்திரன் ஓய்வு பெற்றதை அடுத்து, புதிய தலைவராக எஸ்.கே.பிரபாகர் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் சென்னை பாரிமுனையில் உள்ள தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில், டிஎன்பிஎஸ்சியின் 27வது தலைவராக எஸ்.கே.பிரபாகர் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.  இவர் வரும் 2028ம் ஆண்டு வரை பதவியில் நீடிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

பதவியேற்ற பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எஸ்.கே.பிரபாகர், “தமிழ்நாடு அரசுப் பணிகளில் சேர வேண்டும் என்ற கனவோடு அரசு பணியாளர் தேர்வுகளை எழுதி வருகிறார்கள். அதற்கு அரசு பணியாளர் தேர்வாணையம் கால அட்டவணை தேர்வு செய்து நடத்தி வருகிறது. இந்த தேர்வுகளை நேர்மையாக நடத்த தலைவர் என்ற முறையில் நான் உறுதியளிக்கிறேன். இந்த தேர்வுகளின் முடிவுகளும் உடனடியாக வெளியிட அனைத்து நடவடிக்கைகளும் எடுப்போம். 

இந்த தேர்வுகளைத் தாண்டி மற்ற போட்டி தேர்வுகளையும் மாணவர்கள் எழுதுகிறார்கள். இரு தேர்வுகள் ஒரே நாளில் இல்லாதவாறு பார்த்துக் கொள்கிறோம். தமிழ்நாடு அரசு பணியில் சேர வேண்டும் என்ற ஆர்வம் உள்ள மாணவர்களுக்கு கனவுகள் நிறைவேற அனைத்து பணிகளையும் மேற்கொள்வோம். கடந்த இரண்டு வாரங்களாக எங்களுக்கு பலரும் ஆலோசனைகள் வழங்கி வருகிறார்கள். தேர்வு எழுதிய பின் முடிவுகள் விரைவில் வந்தால் தான் இந்த பணியில் சேர்வதால் அல்லது வேறு முயற்சி எடுப்பதா என்று முடிவு எடுக்க முடியும்.

நடப்பு சிக்கல்களை பார்த்து மற்ற தேர்வுகளை எப்படி நடத்துகிறார்கள் என்பதையும் கவனித்து அதை பின்பற்றவும் முயற்சி எடுத்து வருகிறோம். தேர்வுக்கும், தேர்வு முடிவுகளுக்கும் இருக்கும் இடைவெளியை நிச்சயம் குறைக்க நடவடிக்கை எடுப்போம். கால தாமதத்தை குறைப்பது தான் எங்களது முதல் பணி. ஒவ்வொரு தேர்வுக்கும் ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட நாட்களில் தேர்வு எழுத நடைமுறை கொண்டுவர வேண்டும்.

தேர்வுகள் குறிப்பிட்ட கால அட்டவணைகளில் நடப்பதற்கும் விரைவில் தேர்வு முடிவுகள் வெளியிடவும் நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் பெரிய புகார்கள் இல்லாமல் தரமான முறையில் அரசு தேர்வுகள் நடத்தி வருகிறது. இதை மேம்படுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது வரும் குறைகளை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.