×

தமிழகத்தில் இவ்வளவு போதை பொருட்களா? பறிமுதல் மட்டும் ரூ.21 கோடி மதிப்பு.. அபராதம் எத்தனை கோடி தெரியுமா? - அமைச்சர் மா.சு கொடுத்த டேட்டா... 

 

 இந்த ஆண்டு  ஒரு கோடிக்கு மேலான இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்று, போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழியை எடுத்துள்ளது மிகப் பெரிய சாதனையாக பார்க்கப்படுவதாக மக்கள் நல்வாழ்த்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். 

 தமிழகம் முழுவதும் உள்ள கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில்   போதை எதிர்ப்பு உறுதிமொழி ஏற்றல் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு என்ற கருப்பொருளை மையமாக வைத்து நடைபெற்ற  இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போதைப்பொருள் பயன்பாடற்ற தமிழ்நாடு பெருந்திரள் போதை எதிர்ப்பு உறுதிமொழியை கூற, காணொலி வாயிலாக பங்கேற்ற கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் உறுதிமொழியை ஏற்றனர். 

அந்தவகையில் சென்னை சைதாப்பேட்டை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில்,  சென்னை மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சார்பாக போதை எதிர்ப்பு உறுதிமொழி ஏற்றல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே ஆகியோர் கலந்துகொண்டனர்.  இந்த நிகழ்ச்சியின் முடிவில் பேசிய  அமைச்சர் மா.சுப்பிரமணியன், “முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்றதிலிருந்து, போதை பொருட்களுக்கு எதிராக பல்வேறு வகையான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை காவல்துறை மூலமாக மிகச் சிறப்பாக நடத்திக் கொண்டிருக்கிறது. 

முதலமைச்சரின் தலைமையில் 2022-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10-ஆம் தேதி, மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் உடனான கூட்டம் நடத்தி, 'போதைப் பொருள் நடமாட்டமற்ற தமிழ்நாடு' என்ற வகையில் தமிழகத்தை ஒரு புதிய பாதை நோக்கி அழைத்துச் செல்லும் முயற்சியோடு, பல்வேறு தீர்மானங்களை முதலமைச்சர் கொண்டு வந்துள்ளார்.  அதனடிப்படையில் அதற்கு அடுத்த நாளான ஆகஸ்ட் 11-ம் தேதி, தமிழ்நாடு உயர்கல்வி கல்லூரி மாணவர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற ஒரு உறுதிமொழி நிகழ்ச்சி நடைபெற்றது.  இதில் 30 லட்சத்திற்கும்  மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். 

காவல்துறையால் முன்னெடுக்கப்பட்ட இந்த நிகழ்ச்சி, ஏசியா புக் ஆஃப் வேர்ல்ட் ரெக்கார்ட்டில் இடம்பெற்று, உலக சாதனையாகவே படைக்கப்பட்டது.  தொடர்ந்து அதற்கு அடுத்த ஆண்டு 2023-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11-ஆம் தேதி, அதே உறுதிமொழி நிகழ்ச்சியில், 70 லட்சம் மாணவர்கள் பங்கேற்று உறுதி மொழியை எடுத்தனர்; உலக சாதனையாக பதிவு செய்யப்பட்டது.  

இந்த ஆண்டு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் மாணவர்கள் உறுதிமொழியை எடுத்துள்ளதில் 37 ஆயிரத்து 592 அரசு பள்ளிகள், 8,329 அரசு உதவி பெறும் பள்ளிகள், 11,443 தனியார் பள்ளிகள் என, மொத்தம் 57 ஆயிரத்து 364 பள்ளிகளில் உள்ள ஒரு கோடி மாணவர்கள் பங்கேற்கும் வகையில் உறுதிமொழி நிகழ்ச்சி நடைபெற்று முடிந்துள்ளது; இது மிகப் பெரிய சாதனை.. இளைய சமுதாயத்தை போதை பழக்கத்தில் இருந்து மீட்டு எடுப்பதற்கான முயற்சியாக தமிழக முதலமைச்சர் பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்.  முதலமைச்சரின் வழி காட்டுதலோடு மருத்துவத்துறை சார்பில் உணவு பாதுகாப்பு துறை இதற்குரிய முழுமையான நடவடிக்கைகளை பல்வேறு துறைகளுடன் ஒருங்கிணைந்து எடுத்து வருகிறது.  

தடை செய்யப்பட்ட பான்பராக், குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை விற்பவர்கள் மீதான நடவடிக்கை தொடர்ச்சியாக எடுக்கப்பட்டு வருகிறது.  தமிழகத்தை பொருத்தவரை 8 லட்சத்து 66 ஆயிரத்து 619 கடைகளில் ஆய்வு செய்யப்பட்டு, 32,404 கடைகளில் போதை பொருட்கள் விற்பனை செய்வது  கண்டறியப்பட்டது.  20 கோடியே 91 லட்சத்து 19 ஆயிரத்து 478 ரூபாய்  மதிப்புள்ள  2 கோடியே 86 ஆயிரத்து 681 கிலோ பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.  பறிமுதல் செய்யப்பட்டதன் விளைவாக 17,481 கடைகள் மூடி சீல் வைக்கப்பட்டுள்ளன. அதன் மூலம் உணவு பாதுகாப்பு துறை அபராதத் தொகையாக ரூ. 33 கோடியே 28 லட்சத்து 13,200 வசூலிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.