பாலியல் வழக்கில் சிக்கிய மகன்.. மன உளைச்சலில் இருந்த சிவராமனின் தந்தையும் உயிரிழப்பு..
பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான சிவராமன் இன்று உயிரிழந்த நிலையில், அவரது தந்தையும் நேற்று சாலை விபத்தில் உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் போலியாக என்.சி.சி முகாம் நடத்தி 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் நாதக முன்னாள் நிர்வாகியான, போலி என்.சி.சி. மாஸ்டர் சிவராமன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். தலைமறைவான சிவராமனை 19ம் தேதி போலீஸார் கோவையில் வைத்து கைது செய்தனர். முன்னதாக போலீசார் தேடுவதை அறிந்த சிவராமன் கைதாவதற்கு முன்பே எலி மருந்தை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். இதனைத்தொடர்ந்து போலீசாரிடம் இருந்து தப்ப முயன்ற போது கால் உடைந்ததை அடுத்து, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. மருத்துவ சோதனையில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதனையடுத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிவராமனுக்கு மூச்சு திணறல் அதிக அளவில் இருந்ததன் காரணமாக மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு நேற்று முன்தினம் இரவு அவர் கொண்டுவரப்பட்டார். நேற்று முழுவதும் அவர் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று அதிகாலை 5:30 மணி அளவில் சிவராமன் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்திருக்கிறார். தற்போது சேலம் அரசு மருத்துவமனையில் அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே சிறுமியை பாலியல் வன்கொடுமை வழக்கில், தனது மகன் கைது செய்யப்பட்டதை அறிந்த சிவராமனின் தந்தை அசோக் மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அத்துடன் நேற்று காவேரிப்பட்டணம் அருகே பைக்கில் சென்று கொண்டிருந்த போது நிலைதடுமாறி கீழே விழுந்து விபத்தில் சிக்கியிருக்கிறார். அப்போது அசோக் மதுபோதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த விபத்தில் தலையில் அடிபட்டு அசோக் குமார் நள்ளிரவு 11.30 மணியளவில் உயிரிழந்தார். தந்தை நள்ளிரவில் உயிரிழந்த நிலையில், சிகிச்சை பலனின்றி சிவராமன் காலை 5.30 மணியளவில் உயிரிழந்திருக்கிறார்.