×

சாலையில் நடந்து சென்ற மாமியாரை கத்தியால் குத்திக் கொன்ற மருமகன்

 

அதிராம்பட்டினத்தில் சாலையில் நடந்து சென்ற மாமியாரை மருமகன் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினத்தைச் சேர்ந்தவர் வீரக்குமார் (33). இவரது மனைவி ரஞ்சிதா (30), இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் கணவன், மனைவி குடும்பத் தகராறு காரணமாக அடிக்கடி சண்டை ஏற்படுவது வாடிக்கையாக இருந்துள்ளது. இதனால் மனமுடைந்த ரஞ்சிதா தனது தாய் வீட்டிற்கு வந்துவிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று அதிராம்பட்டினம் வண்டிப்பேட்டை அருகில் சாலையில் நடந்து சென்ற மாமியார் சாந்தியை (50) மருமகன் வீரக்குமார் கத்தியால் குத்தினார். 

அப்போது அதை தடுக்கவந்த மனைவி ரஞ்சிதாவையும் கையில் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். உடனே அருகில் இருந்தவர்கள் ஒரு ஆம்புலன்ஸ் மூலம் சாந்தி மற்றும் ரஞ்சிதாவை பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சாந்தியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். கையில் படுகாயமடைந்த ரஞ்சிதாவுக்கு முதலுதவி செய்து, மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து ரஞ்சிதா அதிராம்பட்டினம் போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் அதிராம்பட்டினம் போலீசார் வழக்குப்பதிந்து வீரக்குமாரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அதிராம்பட்டினத்தில் பெரும் பரபரப்பபை ஏற்படுத்தி உள்ளது.