×

தனுஷ், விஷால் விவகாரம்- கூடுகிறது தென்னிந்திய நடிகர் சங்க செயற்குழு

 

தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நிதியை தவறுதலாக பயன்படுத்தியதற்காக நடிகர் விஷால் படத்திற்கு கட்டுப்பாடு, பல தயாரிப்பாளர்களிடம் முன்பணம் பெற்று படங்களை நடித்துக் கொடுக்காமல் காலதாமதம் செய்வதால் நடிகர் தனுஷ் படத்திற்கு கட்டுப்பாடு, புதிய படங்களின் பூஜை மற்றும் படப்பிடிப்பு நிறுத்துவது, நடிகர்களின் சம்பளம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் புதிய விதிகளை மாற்றி அமைப்பது தொடர்பாக அடுத்தடுத்த அறிக்கைகளின் மூலம் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அதிரடி முடிவுகளை வெளியிட்டு வந்தது. 

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகவும் அறிக்கை வெளியிட்ட அன்றைய தினமே நடிகர் சங்கம் அவசர கூட்டத்தையும் கூட்டி தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு அவர்களது கண்டனங்களையும் தெரிவித்திருந்தனர். அதற்கு செவி கொடுக்காத தயாரிப்பாளர்கள் சங்கம் மீண்டும் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயற்குழு கூட்டத்தைக் கூட்டி தாங்கள் எடுத்த முடிவில் உறுதியாக இருப்பதாக செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்தனர். 

இந்நிலையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நிலைபாடு குறித்தும், நடிகர்கள் தனுஷ், சிம்பு, கமல், விஷால், ஆகியோர் மீது தயாரிப்பாளர்கள் சங்கம் கொண்டு வந்துள்ள கட்டுப்பாடுகள் குறித்தும் மேலும் சினிமா ஸ்டிரைக் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை ஆலோசிப்பதற்காக தென்னிந்திய நடிகர் சங்க செயற்குழு கூட்டம்  சென்னை தியாகராயர் நகரில் உள்ள நடிகர் சங்க அலுவலகத்தில் இன்று மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது. இதற்கிடையில் தன் மீதான குற்றச்சாட்டுக்கு 24 மணி நேரத்தில் விளக்கம் அளிக்கும்படி தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு நடிகர் விஷால் கடிதம் எழுதி இருப்பது குறிப்பிடத்தக்கது.