தென்மேற்கு பருவமழை இயல்பைவிட 18% கூடுதலாக பதிவு..
தமிழத்தில் நடப்பாண்டு தென்மேற்கு பருவமழை தமிழ்நாட்டில் இயல்பை விட 18% கூடுதலாக பெய்துள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தில் ஆண்டு தோறும் ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தை தென்மேற்கு பருவமழை காலமாக கணக்கிடுவது வழக்கம். அந்தவகையில் தென்மேற்கு பருவமழைக்கான மழை கணக்கீடு இன்றுடன் நிறைவு பெறுகிறது. நாளை முதல் வடகிழக்கு பருவமழை மழை கணக்கீடு தொடங்குகிறது. இந்த நிலையில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தமிழ்நாட்டில் இயல்பை விட கூடுதலாக பெய்துள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை சராசரி இயல்பாக 328.4 மி.மீ என்ற அளவில் பெய்ய வேண்டும். ஆனால் இந்த ஆண்டு 389.1 மி.மீ என்ற அளவில் மழை பதிவாகியுள்ளது. இது இயல்பை விட 18% கூடுதலாகும். இன்றுடன் செப்டம்பர் மாதம்.நிறைவடையும் நிலையில், இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழைக்கான மழை கணக்கீடும் நிறைவடைந்தது. நாளை முதல் வடகிழக்கு பருவமழை மழை கணக்கீடு தொடங்கும் நிலையில், இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழைக்கான நீண்டகால வானிலை முன்னறிவிப்பு நாளை வெளியிடப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அக்டோபர் 15ம் தேதிக்கு மேல் எப்போது வேண்டுமானாலும் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.