×

சனிக்கிழமை சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம்- சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு 

 

வருகின்ற சனிக்கிழமை சட்டப்பேரவை சிறப்பு கூட்டம் நடைபெற உள்ளதாக பேரவை தலைவர் அப்பாவு பேட்டியளித்துள்ளார்.

திருவண்ணாமலையில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை தலைவர் அப்பாவு செய்தியாளர்களை இன்று சந்தித்தார். அப்போது பேசிய அவர், “சட்டமன்ற கூட்டத்தொடரில் நீதிமன்றம் பற்றியோ, ஆளுநர் பற்றியோ அல்லது குடியரசுத் தலைவர் பற்றியோ விவாதிக்க மாட்டோம். தமிழ்நாடு அரசால் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. தற்பொழுது திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. மீண்டும் நிறைவேற்றும் வேண்டும் என அரசு விரும்புவதால் அது தொடர்பாக  நாளை மறுநாள் சனிக்கிழமை அன்று சட்டப்பேரவை சிறப்பு கூட்டம் கூட்டப்பட உள்ளது. 

சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பக்கூடிய மசோதாக்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும் அல்லது குடியரசு தலைவருக்கு ஒப்புதலுக்காக அனுப்ப வேண்டும் அல்லது ஏதேனும் நிறை, குறைகள் இருக்குமாயின் திருப்பி அனுப்ப வேண்டும். தற்பொழுது சட்டமன்றத்தில் நிறைவேற்றிய மசோதாக்களை ஆளுநர் திருப்பி அனுப்பி உள்ளார். நீதிமன்றங்கள், ஆளுநர், குடியரசுத் தலைவர் ஆகியோர் பற்றி சட்டமன்றத்தில் விவாதம் ஏதும் கிடையாது. சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை திருப்பி அனுப்பிய பின்பு மீண்டும் சட்டமன்றத்தில் அதே சட்டம் இயற்றப்பட்டால் அதனை ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று சட்ட விதிகள் உள்ளன. 


ஆன்லைன் ரம்மி தடை சட்டம் குறித்து சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு தொடர்ந்து ஆளுநருக்கு அனுப்பப்பட்ட பொழுது திருப்பி அனுப்பினார். மீண்டும் அதே சட்டத்தை சட்டமன்றத்தில் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பிய பிறகு தொடர்ந்து பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு சட்டம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. குறிப்பாக நீட் தேர்வு ரத்து குறித்து ஆளுநர் தற்பொழுது மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்பி உள்ளோம். விளையாட்டுத் துறை அமைச்சர் நீட் தேர்வு ரத்து குறித்து 50 லட்சம் மாணவர்களிடம் டிஜிட்டல் கையெழுத்து பெற்று ஜனாதிபதிக்கு 
அனுப்பி வைக்க உள்ளார்.

மாநில பட்டியலில் இருந்த கல்வி தற்பொழுது பொது பட்டியலுக்கு சென்று விட்டதால் மாநில மற்றும் ஒன்றிய அரசிற்கு உரிமை உள்ளது. ஒன்றிய அரசு அவர்களது உரிமையை பயன்படுத்தி பாராளுமன்றத்தில் நீட் தேர்வு மசோதாவை கொண்டு வந்தது. சட்டமன்றம் என்பது மக்களால் கொண்டுவரப்பட்டது. அதற்கு இறையாண்மை உள்ளது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இறையாண்மையுள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் ஏக மனதாக நிறைவேற்றி அனுப்பப்பட்ட மசோதாக்களை குடியரசு தலைவரோ, ஒன்றிய அரசோ முறையாக பரிசீலனை செய்ய வேண்டும்” என்றார்.