×

இலங்கை சிறையில் வாடும் மீனவர்கள் :  தருவைக்குளத்தில் உண்ணாவிரதப் போராட்டம்.. கண்ணிர்மல்க குடும்பத்தினர் கோரிக்கை.. 

 

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 22 தமிழ்நாடு மீனவர்களை, 35 நாட்களாகியும் விடுவிக்காததால் தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளம் பகுதியில் மீனவர்கள் உண்ணாவிரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம், தருவைகுளத்தில் இருந்து கடந்த மாதம் 2 விசைப்படகுகளில் 22 மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர்.  அவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி  இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். தொடர்ந்து கல்பிட்டி மீன்வளத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட  22 மீனவர்களும், புத்தளம் மாவட்டம் கல்பிட்டி சுற்றுலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு வாரியாபொல சிறையில் அடைக்கப்பட்டனர். 

 தொடர்ந்து  இந்த வழக்கு கடந்த 3-ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தபோது,  நீதிபதி அயோனா விமலரத்ன,   மிக்கேல் ராஜா என்பவரது  படகில் இருந்த 12 மீனவர்களுக்கும் தலா ரூ.42 லட்சம் (இலங்கை பணம் ரூ.1.5 கோடி) அபராதம் செலுத்தவும்,  தவறினால் 6 மாதம் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.   தேன் டெனிலா என்பவரது மற்றொரு  விசைப்படகில் இருந்த 10 பேர் மீதான வழக்கு விசாரணை செப்.10-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 2 விசைப் படகுகளையும், 22 மீனவர்களையும், அங்குள்ள நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட அபராதத்தை ரத்து செய்து மீட்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை மீனவர்களின் குடும்பத்தினர் வலியுறுத்தியுள்ளனர். தொடர்ந்து இதனை வலியுறுத்தி  இன்று தருவைகுளத்தில் பொதுமக்கள் மற்றும் மீனவர்கள் சார்பில் கடையடைப்பு மற்றும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  பேருந்து நிறுத்தம் அருகே நடந்த போராட்டத்தில் வணிகர்கள், பொதுமக்கள் மற்றும் அதிமுகவினர்  கலந்து கொண்டனர்.  சிறையில் உள்ள மீனவர்களின்  குடும்பத்தினர் , கண்ணீர் மல்க மத்திய , மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.