×

கஞ்சா ரெய்டில் சிக்கிய எஸ்ஆர்எம் கல்லூரி மாணவர் தற்கொலை

 
கஞ்சா ரெய்டில் சிக்கியதால் நான்காவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்ட கல்லூரி மாணவரின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.


சென்னை அடுத்த பொத்தேரியில் உள்ள பிரபல தனியார் பல்கலைக்கழகத்தில் ஆந்திர மாநிலம் செகந்திராபாத் பகுதியைச் சேர்ந்த கொண்ட ஸ்ரீனிவாச நிகில் (20)‌. எனும் மாணவர் பி.டெக் நான்காம் ஆண்டு படித்து வந்தார். இவர் அதே பகுதியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் அரை எடுத்து தங்கி வந்தார். 
இந்நிலையில் கடந்த 31ஆம் தேதி தாம்பரம் மாநகர காவல் துறையைச் சேர்ந்த ஆயிரத்திற்கு மேற்பட்ட போலீசார் நிகில் தங்கி இருந்த தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் நிகில் தங்கி இருந்த அறையில் இருந்து கஞ்சா பொட்டலங்களை போலீசார் கைப்பற்றியதாக கூறப்படுகிறது.
இதனை அடுத்து மறைமலை நகர் காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட நிகிலை போலீசார் எச்சரித்து அறிவுரை கூறிய வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். மேலும், தனியார் பல்கலைக்கழகத்தில் இருந்து நிகிலின் பெற்றோரை கல்லூரிக்கு வர சொல்லியதாகவும் கூறப்படுகிறது. 
இதனால் மன உளைச்சலில் இருந்த நிகில் நேற்று இரவு 9 மணி அளவில் தனியார் குடியிருப்பின் நான்காவது மாடியில் உள்ள தனது அறையின் பால்கனியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். தொடர்ந்து அவரது உடல் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த நிலையில் பிரேத பரிசோதனை முடிந்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. 
அப்போது, இறந்து போன மாணவரின் தந்தை கதறி அழுத சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. பொத்தேரியில் போலீசார் நடத்திய கஞ்சா ரெய்டில் சிக்கிய மாணவர் மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.