×

தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் அழைத்து செல்லும் முதல்வர் ஸ்டாலின் - காங்கிரஸ் பாராட்டு!!

 

நான்காம் ஆண்டில் காலடி பதிக்கிற தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், திராவிட முன்னேற்ற கழக ஆட்சி திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் அமைந்து நேற்றுடன் 3 ஆண்டு நிறைவு பெற்றிருக்கிறது. அனைத்து துறைகளிலும் மகத்தான சாதனைகள் புரிந்து தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் சென்று இந்தியாவின் முன்னோடி மாநிலங்களில் ஒன்றாக திகழச் செய்த தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக மனதார பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன்.

கடந்த 2021 ஆம் ஆண்டு மே 7 ஆம் நாள் முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்ட அதே மேடையில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுகிற வகையில் கொரோனா நிவாரண தொகையாக ரூபாய் 4,000, பால் விலை லிட்டருக்கு ரூ.3 குறைப்பு, பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3 குறைப்பு உள்ளிட்ட ஐந்து கோப்புகளில் கையெழுத்திட்டு ஆணை பிறப்பித்ததை இன்று நினைவுகூர விரும்புகிறேன். கொடுத்த வாக்குறுதிகளில் 90 சதவிகிதத்தை மூன்றாண்டுகளில் நிகழ்த்தி சாதனை புரிந்ததை அனைவரும் பாராட்டுகிற நிலை இன்றைக்கு ஏற்பட்டிருக்கிறது.

தி.மு.க. ஆட்சியின் மக்கள் நலத் திட்டங்களில் முதன்மையானதாக கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் 1 கோடியே 15 லட்சம் பேருக்கு மாதம் ரூபாய் 1,000 வழங்குகிற வாழ்வாதார திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தினால்31,000 அரசு பள்ளிகளில் 17 லட்சம் மாணவர்கள் பயன் பெறுகின்றனர். புதுமை பெண் திட்டத்தின் மூலம் 2 லட்சத்து 72 ஆயிரத்து 216 கல்லூரி மாணவிகள், மாதம் ரூபாய் 1000 பெற்று தொடர்ந்து மேல்படிப்பு செல்வது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. விடியல் பயண திட்டத்தில் மகளிர்445 கோடி முறை பயணம் செய்து மாதந்தோறும் ரூபாய் 888 கோடி சேமிக்கிற சூழல் இன்றைக்கு ஏற்பட்டிருக்கிறது.

மக்களைத் தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம், மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூபாய் 70,000 கோடி வங்கிக் கடன் மூலம் 12 லட்சம் குழுக்கள் பயனடைகிற நிலை இன்றைக்கு ஏற்பட்டிருக்கிறது. விவசாயிகளுக்கு 2 லட்சம் இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டிருக்கிறது. ரூபாய் 4818 கோடி கூட்டுறவு கடன் தள்ளுபடி செய்யப்பட்டு 13 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர். 7.5 சதவிகித இடஒதுக்கீட்டின் காரணமாக 28,601 அரசு கல்லூரி மாணவ- மாணவியர் தொழிற்கல்வி பெற வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

ஒன்றிய பா.ஜ.க. அரசின் தமிழக விரோத போக்கு, மாநில நிதி பகிர்வில் வஞ்சிக்கிற போக்கு ஆகியவற்றின் காரணமாக பல்வேறு இடர்பாடுகளுக்கு இடையே தமிழக அரசு சாதனைகளை புரிந்து வருகிறது. தமிழ்நாடு 1 ரூபாய் வரியாக ஒன்றிய அரசிற்கு வழங்கினால் 29 பைசா தான் திரும்ப வழங்கப்படுகிறது. நிதிக்குழுவின் பரிந்துரைகள் நிறைவேற்றப்படுவதில்லை. சமீபத்தில் வெள்ள நிவாரண நிதியாக ரூபாய் 37,000 கோடி கேட்டதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் தமிழக அரசு ஒன்றிய அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

கடந்த10 ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சியில் வைத்துவிட்டுப் போன மொத்த கடன் ரூபாய் 5 லட்சத்து40 ஆயிரம் கோடி. பொதுத்துறை நிறுவனங்களின் கடன் ரூபாய் 3 லட்சம் கோடி. ஆகமொத்தம் 8 லட்சத்து 40 ஆயிரம் கோடி கடன் சுமையோடு தான் தி.மு.க. ஆட்சி பதவியேற்றது. பல்வேறு நிதி இடர்பாடுகளுக்கிடையிலும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் பாரபட்சமான அணுகுமுறைகளுக்கிடையேயும் மகத்தான சாதனைகளை புரிந்து மூன்றாம் ஆண்டிலிருந்து நான்காம் ஆண்டில் காலடி பதிக்கிற தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.என்று குறிப்பிட்டுள்ளார் .