×

பொன்னாம்பட்டி காட்டுப்பகுதியில் கல்மரம் கண்டுபிடிப்பு..!

 

புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் ஒன்றியம் மிரட்டு நிலை அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியரின் வழிகாட்டுதலின்படி அறிவியல் ஆசிரியர் மா. ஜீவிதா மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்கள் ஆய்வு மேற்கொண்டதில் பள்ளியின் அருகில் உள்ள பொன்னாம்பட்டி கிராமத்தில் காட்டுப்பகுதி ஒன்றில் கல்மரம் ஒன்று கண்டறியப்பட்டது.

மேற்படி இடத்தினை புதுகை தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு நடுவம் தலைவர் ச.பாண்டியன் நேற்று ஆய்வு செய்து இது கல் மரம் தான் என்பது உறுதிப்படுத்தினார். புதுக்கோட்டை நிலவியல்  அமைப்பானது மாறுபாடுடைய நில அமைப்பாக உள்ளது. இங்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பூமியின் காலநிலை மாற்றத்தால் எரிமலைக் குழம்பு வெளிவந்தும், விண்கற்கள் வெடித்துச்சிதறி பூமியில் பலகோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்திருந்த டைனோசர்,  தாவரங்கள், கடல்வாழ் உயிரினங்கள் மற்றும் பல்வகை உயிரினங்கள் இயற்கையாகவே அழிவுக்குள்ளாகியது.  இதனால் பூமியின் பெரும் பகுதியில் எண்ணற்ற உயிரினங்களும் தாவரங்களும் புதையுண்டு பலகோடி ஆண்டுகளாக பூமிக்கடியில் சிக்கியுள்ளது. சுண்ணாம்புப் பாறைகளின் இடையில் சிக்கியதன் காரணமாகவும், காரதன்மையின் காரணமாக மட்காமல் அதே நிலையில் இருந்துள்ளது. இதன் காரணமாக, கரிமப் பொருளாக மட்கும் நிலையில் உள்ள மரம் கடல்வாழ் உயிரிகள், கனிமப் பொருளால் ஆன படிமங்களாக மாறிவிட்டன.

இந்த நிகழ்வு ஏற்பட நீண்ட நெடிய காலங்களை எடுத்துக் கொள்கிறது. கல் மரம் என்பது தொல்லுயிர் எச்சம் என்றும், உயிருடன் மண்ணுக்குள் புதையுண்ட உயிரினங்கள் மட்டுமே தொல்லுயிர் எச்சங்களாக மாற்றம் அடைகின்றன என்று அறிவியல் ஆய்வாளர்களால் குறிப்பிடப்படுகிறது. தமிழகத்தில் அரியலூர்,  கடலூர் மாவட்டம் திருவக்கரை, பெரம்பலூர் போன்ற இடங்களில் கல் மரப் படிவங்கள் அதிக அளவில் கிடைத்துள்ளன. புதுக்கோட்டையில்  நரிமேடு பகுதியில் ஏற்கனவே இரண்டு கல்மர துண்டுகள் கிடைத்துள்ளது. இதில் ஒன்று 2016 ஆம் ஆண்டு தமிழ் பல்கலைக்கழக ஆய்வு மாணவர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. இது 28 செ.மீ. நீளமும், 19 செ.மீ. அகலமும் கொண்டதாகவும் மற்றொன்று  2021 ஆம் ஆண்டு ஒரு கல் மரம் புதுகை பாண்டியன் அவர்களால்  கண்டறிப்பட்டது. இதன் அளவு 10 செ.மீ உயரமும் 10.5 செ.மீ அகலமும் கொண்டதாக இருந்தது.  இந்தக் கல் படிமம், புதுக்கோட்டை மாவட்ட அரசு அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.  தற்போது கிடைத்த கல் மரத்துண்டுகள்  மண்ணில் புதைந்த நிலையில் காணப்படுகிறது. இவை மிக நீண்டதாக இருந்து, தற்போது உடைந்து பல பாகங்களாக காணப்படுகிறது. இந்த இடத்தினை இந்திய புவியியல் ஆய்வுத் துறை ஆய்வு செய்து இதன் தொடர்ச்சி மற்றும் இதன் வகையினை கண்டறியவும் மேலும் இதனை வேறொரு இடத்தில் மாற்றி காட்சிப்படுத்தாமல் அதே இடத்தில் அருங்காட்சியகமாக அல்லது புவியியல் பார்வையிடமாக அறிவித்து சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் வகையில் தேவையான ஏற்பாடு செய்யவும் வேண்டுகோள்விடுக்கப்பட்டுள்ளது.