×

சட்டத்தை வலுவாக்கனும்... அப்போதான் மருத்துவர்கள் மீதான வன்முறை குறையும் - சீமான்.. 

 

 சட்டத்தை வலுவாக்குவதன் மூலமே  மருத்துவர்களுக்கும், மருத்துவமனைகளுக்கும் எதிரான வன்முறை தடுக்கப்படும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொல்கத்தாவைச் சேர்ந்த முதுகலை பயிற்சி மருத்துவர் கொடூரமான முறையில் பாலியல் வன்புணர்வு செய்து கொல்லப்பட்ட நிகழ்வு நாடெங்கிலும் உள்ளவர்களை அதிரச் செய்துள்ளது. சமூகப் பொருளாதார அளவில் முன்னேறி வரும் மருத்துவர்களுக்கே இந்த நிலை என்றால், குரலற்றவர்களாக உள்ள மற்ற பெண்களின் நிலையை எண்ணிப் பார்க்கவே மனம் பதைபதைக்கிறது. 

படுகொலை செய்யப்பட்ட பெண் மருத்துவருக்கு நீதிகேட்டு இந்திய மருத்துவர்கள் சங்கமும், இந்திய பல் மருத்துவர்கள் சங்கமும் நாடெங்கிலும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இன்று (17-08-2024) முன்னெடுக்கும்  வேலைநிறுத்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு  நாம் தமிழர் கட்சியும், அதன் மருத்துவப் பாசறையும் முழு ஆதரவை .நல்கி கோரிக்கைகள் வெல்லத் துணைநிற்கிறது.

உண்மையான குற்றவாளிகள் அனைவரும் எந்த அரசியல் தலையீடும் இன்றிக் கண்டறியப்பட்டு, மிகக்கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். அவர்களுக்குக் கொடுக்கப்படும் கடும் தண்டனையே இது போன்ற கொடூர நிகழ்வுகள் எதிர்காலத்தில் நிகழாமல் தடுக்கும். ‘சுகாதார வல்லுநர்கள் மற்றும் மருத்துவ நிறுவனங்களுக்கு எதிரான வன்முறையைத் தடுக்கும் சட்டத்தை’ வலுவாக்குவதன் மூலமே  மருத்துவர்களுக்கும், மருத்துவமனைகளுக்கும் எதிரான வன்முறை தடுக்கப்படும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.