பட்டம் பெறும்போதே ஆளுநரிடம் புகாரளித்த மாணவர்! பேராசிரியர்கள் பணம் கேட்பதாக குற்றச்சாட்டு
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் உள்ள இரண்டு ஆதிதிராவிடர் விடுதிகள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை என பட்டம் பெற வந்த நபர் ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் புகார் மனு அளித்த நிலையில், உயர்கல்வித்துறை அமைச்சர் கோ.வி செழியன், துறைச் செயலர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் 39 -ஆவது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் கோ.வி செழியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு பட்டம் வழங்கினர். அப்போது ஆங்கிலத்தில் முனைவர் பட்டம் பெற வந்த பிரகாஷ் என்பவர் திடீரென மேடையிலேயே பல்கலைக்கழகத்தில் முறைகேடுகள் நடைபெறுவதாகவும், சில கோரிக்கைகளை வலியுறுத்தி மனு ஒன்றை ஆளுநரிடம் வழங்கினார். மேலும் முனைவர் பட்டம் பெற வழிகாட்டும் பேராசிரியர்கள் பிஹெச்டி மாணவர்களிடம் பணம் கேட்பதாகவும், தனிப்பட்ட வேலைகளை செய்ய சொல்வதாகவும் குற்றஞ்சாட்டினார்.