×

"வார்டன் வருவதில்லை... சாப்பாட்ல அதிகமா பூச்சி இருக்கும்.." எம்.எல்.ஏவிடம் புகாரளித்த மாணவிகள்

 

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே அரசு பள்ளி மாணவ, மாணவி விடுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் அன்னியூர் சிவா திடீர் ஆய்வு மேற்கொண்டார்.


விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட அன்னியூர் கிராமத்தில் உள்ள அரசு பள்ளி ஆண்கள் மற்றும் பெண்கள் விடுதியில் அடிப்படை வசதிகள் உள்ளதா என திடீர் ஆய்வு மேற்கொண்டார் விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் அன்னியூர் சிவா. அப்பொழுது மாணவர்கள் மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது சமையலறைக்குள் சென்று உணவின் தரம் எவ்வாறு இருக்கிறது எனவும் விடுதியில் அடிப்படை வசதிகள் வழங்கப்படுகிறதா என்றும் மாணவர்களிடம் கேட்டறிந்தார். 

பின்னர் மாணவி விடுதிக்கு சென்று அங்குள்ள குறைகள் குறித்து மாணவியரிடம் கேட்டபோது.... மாணவிகள் எதுவும் பேசாமல் மௌனமாக இருந்தனர். அப்பொழுது சட்டமன்ற உறுப்பினர் அன்னியூர் சிவா "எதற்கும் பயப்பட வேண்டாம் நான் இருக்கிறேன்" என கூறிய பின்னர், மாணவிகள் விடுதியில் உள்ள குறைகளை அடுக்கடுக்க முன் வைத்தனர். அப்போது மாணவர்கள், “விடுதிக்கு வார்டன் வருவதில்லை... சாப்பாட்ல அதிகமா பூச்சி இருக்கும்... சொன்ன எங்கள திட்டுவாங்க” என்றார். பின்னர் அனைத்து குறைகளையும் செயல்படுத்தி தருவதாக உறுதி அளித்தார் சட்டமன்ற உறுப்பினர் அன்னியூர் சிவா.