×

முதல்வர் ஸ்டாலின் கூற போதை எதிர்ப்பு உறுதிமொழியை ஏற்ற மாணவர்கள்.. 

 

 ‘போதைப்பொருள் பயன்பாடற்ற தமிழ்நாடு’ என்னும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போதை எதிர்ப்பு உறுதிமொழியை கூற மாணவர்கள் உறுதிமொழியேற்றனர். 

போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு என்ற கருப்பொருளை மையமாக வைத்து தமிழகம் முழுவதும் உள்ள கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில் போதைப்பொருள் பயன்பாடற்ற தமிழ்நாடு பெருந்திரள் போதை எதிர்ப்பு உறுதிமொழி ஏற்றல் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. போதைப் பொருள் ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான உறுதி மொழி நிகழ்ச்சி சென்னை பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கல்லூரி மாணவ, மாணவியர்கள்  போதைப்பொருட்கள்  இல்லாத தமிழ்நாடு என்ற உறுதிமொழியை  எடுத்துக்கொண்டனர். அப்போது தமிழ்நாட்டில் போதை பொருட்களை வேரறுக்க அரசுக்கு துணை நிற்பேன் என்று மாணவர்கள் உறுதிமொழி ஏற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போதைப்பொருள் பயன்பாடற்ற தமிழ்நாடு பெருந்திரள் போதை எதிர்ப்பு உறுதிமொழியை கூற, காணொலி வாயிலாக பங்கேற்ற கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களும்  உறுதிமொழியை எடுத்தனர்.   இதை தொடர்ந்து மாநிலத்தில் போதைப்பொருள் உற்பத்தி மற்றும் சட்டவிரோதக் கடத்தலை ஒழிப்பதில் சிறப்பாக பணியாற்றிய காவல் துறை அலுவலர்கள் மற்றும் காவல் ஆளிநர்களுக்கு 2024-ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு முதலமைச்சர் காவலர் சிறப்பு பதக்கங்களை வழங்கி சிறப்பித்தார். இந்த விழாவில் தலைமைச் செயலாளர், உயர் கல்விதுறை அமைச்சர் பொன்முடி, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், டிஜிபி சங்கர் ஜிவால், சென்னை மாநகர காவல் ஆணையர் அருண், உள்பட  துறை சார்ந்த அதிகாரிகள் கல்லூரி மாணவ  மாணவிகள் பங்கேற்றனர்.