எல்.ஐ.சி விவகாரம் தொழில்நுட்ப கோளாறில்லை, அரசியல் கோளாறு - சு.வெங்கடேசன் காட்டம்
எல்.ஐ.சி விவகாரம் தொழில்நுட்ப கோளாறில்லை, ஒன்றிய அரசின் நிர்பந்தத்தால் ஏற்பட்ட "அரசியல் கோளாறு என மதுரை எம்.பி.சு.வெங்கடேசன் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2 நாட்களுக்கு முன்னர் இந்திய ஆயுள் காப்பீடு நிறுவனமான எல்.ஐ.சியின் முகப்பு இணையதளம் ஆங்கிலத்திற்கு பதிலாக இந்தியில் இருந்தது. இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில், சிறிது நேரத்தில் மீண்டும் ஆங்கிலத்திற்கு மாற்றப்பட்டது. இந்த பிரச்சனை தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஏற்பட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டது.
இது தொடர்பாக மதுரை எம்.பி.சு.வெங்கடேசன் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், எல்.ஐ.சி இணைய தள இந்தி பிரச்சனையில் "தொழில்நுட்பக் கோளாறு" என்று எல்ஐசி விளக்கம் அளித்தது. எல் ஐ சி யின் இணையதள மொழித் தெரிவில் இந்தி ஆங்கிலம் தவிர மூன்றாவது மொழியாக மராத்தி சொருகப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலுக்காக மராத்தியை நுழைக்க நடந்துள்ள ஏற்பாடு. இதனால் ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சனை. இது தொழில்நுட்பக் கோளாறில்லை. ஒன்றிய அரசின் நிர்பந்தத்தால் ஏற்பட்ட "அரசியல் கோளாறு என குறிப்பிட்டுள்ளார்.