×


விதிகளை புறக்கணித்து கட்டப்பட்ட பாம்பன் பாலம்...எப்படி ஒப்புதல் கொடுக்கப்பட்டது? - சு.வெங்கடேசன் கேள்வி

 

விதிகளை புறக்கணித்து கட்டப்பட்ட பாம்பன் பாலத்திற்கு எப்படி ஒப்புதல் கொடுக்கப்பட்டது என ரயில்வே அமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும் என சு.வெங்கடேசன் எம்.பி கேள்வி எழுப்பியுள்ளார்.  

பாம்பன் பாலம் 1914 இல் கட்டப்பட்டது. அது அன்றையக் காலத்தில் ஒரு பொறியியல் அதிசயமாகும். அதற்கு பதிலாக புதிய பாலம் ஒன்று கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுமானத்தில் நடந்துள்ள மோசடியை இரயில்வே பாதுகாப்பு ஆணையரே கடுமையாக விமர்சித்துள்ளார். உதாரணமாக தூக்குப்பாலப் பகுதி ரயில்வேயில் ஆராய்ச்சி வடிவம் மற்றும் தர நிர்ணய அமைப்பின் (RDSO) எந்தவிதமான ஒப்புதலும் இல்லாமல் வேறு வடிவமைப்பு விதிகளைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது என்று அவர் சுட்டிக்காட்டி உள்ளார். ரயில்வே வாரியத்தின் ஆதரவோடு ஆர் டி எஸ் ஓ தன் கடமையை கைவிட்டுள்ளது வேதனையாகும் என்று அவர் சுட்டிக் காட்டி உள்ளார். இப்படிப்பட்ட முக்கியமான பாலம் கட்ட தொழில்நுட்ப ஆலோசனை குழு அமைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆராய்ச்சி, வடிவம் மற்றும் தரநிர்ணய அமைப்பை (RDSO) இதில் ஈடுபடுத்த வேண்டாம் என்று ரயில்வே வாரியம் முடிவெடுத்தக் காரணத்தால் தொழில்நுட்பக் குழுவை அமைக்க வில்லை . ரயில்வே வாரியம் தனது சொந்த நடைமுறை விதிகளை மீறுவது மிகவும் ஆபத்தானது துரதிஷ்டமானது என்று ஆணையர் கண்டித்துள்ளார்.